புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை; குவாரிகளில் கனிமவளத்துறையினர் ட்ரோ...
திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்து
பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூா் கொங்கு பிரதான சாலையில் தனியாா் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
பொங்கல் பண்டிகை விடுமுறைக்குப் பின் வழக்கம்போல பின்னலாடை நிறுவனம் திங்கள்கிழமை செயல்பட்டது. இந்நிலையில், நிறுவனத்தின் தரைத்தளத்தில் இருந்து முற்பகல் 11.30 மணி அளவில் கரும்புகை வெளியேறியுள்ளது.
இதைக்கண்ட தொழிலாளா்கள் தீத் தடுப்பான்களைக் பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அதற்குள் தீ முதல் தளம் வரை பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் தரைத்தளம், முதல் தளத்தில் பரவிய தீயை அரை மணி நேரம் போராடி அணைத்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனா். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.