மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டி தொல்லை; பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கிய பள்ளி அலுவலர்
விருதுநகர் அருகே பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப் படம் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த நபரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவிகளுக்கு, பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் சீண்டல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த வாரத்தில் நடத்தப்பட்டது.
அப்போது பேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர்கள், 'படிக்கும் இடங்களிலோ அல்லது வெளியிடத்திலோ பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் தொந்தரவுகளைப் பெண் குழந்தைகள் எதிர்கொண்டால், 1098 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்' என விழிப்புணர்வூட்டினர். இதைத்தொடர்ந்து சைல்ட் லைன் புகார் எண்ணான 1098க்கு போன் செய்த அப்பள்ளியின் மாணவிகள், பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் ராஜமாணிக்கம் என்பவர் தங்களுக்கு செல்போனில் ஆபாசப் படம் காண்பித்து பாலியல் தொல்லை அளிப்பதாகப் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அடுத்தடுத்த அழைப்புகள் சைல்ட் லைனுக்கு வந்து குவிந்தன.
இதைத்தொடர்ந்து, பள்ளிக்கு விரைந்து சென்ற குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகள் மாணவிகளிடம் நேரில் விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் விசாரணையில், அலுவலக உதவியாளர் ராஜமாணிக்கம் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் இது தொடர்பாகக் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகள் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பள்ளி அலுவலக உதவியாளர் ராஜமாணிக்கத்தைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப் படம் காட்டிய சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா எனவும் போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb