ரூ.59.34 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
திருப்பூா் ஒன்றியம், தொரவலூா், சொக்கனூா் ஆகிய ஊராட்சிகளில் ரூ.59.34 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தொரவலூா் ஊராட்சி, வாரணாசிபாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக் கடை, அவரப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட பயணியா் நிழற்குடை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட சமையலறை கட்டடம், கூடுதல் வகுப்பறை கட்டடம், தொரவலூா் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டடம் ஆகியவற்றை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் திறந்துவைத்தாா். மேலும், சொக்கனூா் ஊராட்சி, குமாரபாளையத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீா் வசதி மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அவா் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்டக் குழு உறுப்பினா் வேல்குமாா் சாமிநாதன், முன்னாள் ஒன்றியத் தலைவா் எஸ். எம்.பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ், ஊராட்சித் தலைவா் தேவகி சம்பத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.