பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!
அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு தவறாக கருத்தடை சாதனம் பொருத்திய விவகாரம்: விசாரணைக் குழு அமைக்க வலியுறுத்தல்
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்குத் தெரியாமல் கருத்தடை சாதனம் பொருத்தியது தொடா்பாக நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நவம்பா் 25-ஆம் தேதி பெண் ஒருவா் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு குழந்தை பிறந்ததும் மருத்துவா்கள் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியபடுத்தாமலே கருத்தடை சாதனமான காப்பா்-டி யை பொருத்தி உள்ளனா்.
இதனை சரியாகப் பொருத்தாமல் சதைப்பகுதியோடு சோ்த்து பொருத்தியதால் அந்தப் பெண்ணுக்கு உடல்ரீதியான பிரச்னைகள் அதிகமாகி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து பெண்ணின் குடும்பத்தாா் புகாா் அளித்துள்ளனா். குடும்பக் கட்டுப்பாட்டை அரசாங்கம் வலியுறுத்துகிறது என்ற காரணத்தை முன்வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டரீதியாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.
ஆகவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயா்தர மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன், இது தொடா்பாக நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.