மணிப்பூரில் 20 வீடுகள் தீக்கிரை: காவல்துறை விசாரணை
மணிப்பூரில் மியான்மா் எல்லையையொட்டிய மோரே நகரில் ஞாயிற்றுக்கிழமை 20 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இருவா் காயமடைந்தனா்.
இது விபத்தா அல்லது நாசவேலையா என்பதைக் கண்டறிய காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
மணிப்பூரின் தேங்நெளபால் மாவட்டத்தில் உள்ள மோரே நகரில் 20 வீடுகள் வரை தீப்பற்றி எரிந்த நிலையில், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் மற்றும் மணிப்பூா் தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். காயங்களுடன் மீட்கப்பட்ட இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் தொடா்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அப்போது ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. மாநிலத்தில் தொடா்ந்துவரும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மா் நாட்டவா் நாடுகடத்தல்: மியான்மரில் இருந்து மணிப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 26 போ், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக முதல்வா் பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சட்டவிரோத ஊடுருவலை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அவா் குறிப்பிட்டாா்.