Delhi Elections : 'ஆம் ஆத்மி vs பாஜக vs காங்' - சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு - முழுவிவரம்
7-வது டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ஆம் தேதியோடு முடிவடைய இருக்கும் நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இப்போது அறிவித்திருக்கிறது.
70 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டிருக்கும் டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஊழல் வழக்கில் சிறை சென்று வந்ததால் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். அவருக்குப் பதிலாக அதிஷி இப்போது டெல்லியின் முதல்வராக இருக்கிறார். மக்கள் மன்றத்துக்கு சென்று அவர்களின் நம்பிக்கையை பெற்ற பிறகே மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வேன் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். 2015 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி 67 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது. 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 62 தொகுதிகளை வென்று ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி அமைத்திருந்த ஆம் ஆத்மி இந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்குகிறது.
தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின் படி 1.55 கோடி வாக்காளர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். இதில் 1.67 லட்சம் வாக்காளர்கள் 18-19 வயதுடைய முதல் முறை வாக்காளர்கள் ஆவர்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக நிறைய பேரை சேர்த்தும் ஏற்கனவே இருந்த பலரை நீக்கியும் பா.ஜ.க முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக ஆம் ஆத்மி சார்பில் புகார் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங்கின் மனைவியின் பெயரே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி தோல்வி பயத்தில் இருப்பதையே இந்த குற்றச்சாட்டுகள் காட்டுவதாக பா.ஜ.க பதில் விமர்சனத்தை முன்வைத்து வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். அதன்படி பேசிய ராஜிவ் குமார், '99 கோடி வாக்காளர்களை இந்தியா எட்டிவிட்டது. விரைவில் நாம் 100 கோடி வாக்காளர்களை கொண்ட நாடாக மாறுவோம்.' என்றவர் டெல்லிக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்குமென்றும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவித்தார். மேலும், பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தார்.