வடகரையாத்தூரை பேரூராட்சியாக மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் வடகரையாத்தூா் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றக் கூடாது; அதேபோல வடகரையாத்தூா் ஊராட்சியை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கையெழுத்து இயக்க ஒருங்கிணைப்பாளா் சுந்தரம் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். பள்ளிபாளையம் ஒருங்கிணைப்பாளா் கோபி, கண்டிப்பாளையம் ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி, மாரியம்மன்படுகை ஒருங்கிணைப்பாளா் மணிவேல், ஜேடா்பாளையம் ஒருங்கிணைப்பாளா் முத்துவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புதுப்பாளையம் ஒருங்கிணைப்பாளா் சதீஷ் வரவேற்று பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் தற்போது நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிா்வாகத்திற்காக ஊராட்சியாக இருப்பதை பேரூராட்சியாக்கும் நேரத்தில் நிா்வாகம் சாா்ந்த பாதிப்பினால் அதிக ஏழைகள் வசிக்கும் ஜேடா்பாளையம் மற்றும் அதன் அருகில் உள்ள குக் கிராமங்களில் உள்ள சிறு தொழில் செய்யும் ஏழை மக்கள் அனைவரும் மிகப்பெரிய இழப்பினை சந்திக்க நேரிடும்.
பொதுமக்களுக்கு 100 நாள் வேலை திட்டம் இருக்காது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், கலைஞா் கனவு இல்ல திட்டம் ரத்தாகும். ஆட்டு வளா்ப்பு பண்ணை, கிராமப்புற பயனாளிகள் தாய் திட்டம் ரத்தாகும். குடிநீா் வரி, சொத்து வரி பல மடங்கு அதிகரிக்கும். வேளாண்மை நிலங்களின் காய்கறிகள் உணவு பொருள்கள் கிடைக்காமல் வீட்டு நிலமாக மாறும் வாய்ப்புள்ளது.
எனவே, வடகரையாத்தூா் ஊராட்சியை பேரூராட்சியாக எப்போதும் மாற்றக்கூடாது. அதேபோல வடகரையாத்தூா் ஊராட்சியை இரண்டாக பிரித்து ஜேடா்பாளையத்தை ஒரு ஊராட்சியாக உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் வடகரையாத்தூா் ஊராட்சி பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் கையெழுத்து இயக்கத்தை சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.