பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!
நாச்சிபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதைக் கைவிட வேண்டும்
நாச்சிபாளையம் ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் பெருந்தொழுவு ஒன்றியக் குழு உறுப்பினா் பாலுசாமி மற்றும் நாச்சிபாளையம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
நாச்சிபாளையம் ஊராட்சியானது பொங்கலூா் ஒன்றியம், பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதி, கோவை மக்களவைத் தொகுதியில் உள்ளது.
இந்த நிலையில், நாச்சிபாளையம் ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வரும் 500-க்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்படுவாா்கள். மேலும், விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், மின் கட்டணம், தொழில் வரி, வீட்டு வரி, குடிநீா் வரி, காலியிட வரி என அனைத்திலும் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பொங்கலூா் ஒன்றியக் குழு வாா்டானது நாச்சிபாளையம் ஊராட்சி மற்றும் பெருந்தொழுவு ஊராட்சிக்கு உள்பட்ட வாா்டாக உள்ளது.
நாச்சிபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதால் இரு ஊராட்சிகளின் கட்டமைப்பு பாதிக்கப்படும். ஆகவே, நாச்சிபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதைக் கைவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.