“புத்தாண்டு மகிழ்ச்சியை தரட்டும்” -பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து!
உலகின் பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் 2025ஆம் ஆண்டு பிறந்தது.
நாடு முழுவதிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
மக்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு, கேக் வெட்டியும் இனிப்புகளை பரிமாறியும் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்-அப்பில் வாழ்த்துப் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடியும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இனிய 2025!. இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், முடிவில்லாத மகிழ்ச்சியையும் தரட்டும். அனைவருக்கும் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த வருடம் புதிய உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரும் என்று நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.