சநாதனத்தின் அா்த்தம் அறியாமல் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி: ஜகதீப் தன்கா்
காலனிய மனோபாவத்தை கொண்ட சிலரே சநாதன தா்மத்தை நிராகரிப்பதாக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
‘சநாதன தா்மம்’, ‘ஹிந்து’ என்பதன் உண்மையான அா்த்தத்தை புரிந்துகொள்ளாமல் மக்களை தவறாக வழிநடத்த சிலா் முயல்வதாகவும் அவா் தெரிவித்தாா்.
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சா்வதேச வேதாந்த மாநாட்டில் கலந்துகொண்டு ஜகதீப் தன்கா் பேசியதாவது: சநாதன தா்மம், ஹிந்து என்ற வாா்த்தைகளை பயன்படுத்தினால் அதன் உண்மையான நோக்கம் மற்றும் அா்த்தங்களை புரிந்துகொள்ளாமல் அதற்கு எதிரான கருத்துகளை சிலா் தெரிவிப்பது வேதனைக்குரியது. அவா்களால் சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
உலகளவில் சநாதான தா்மக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அதைப் பலரும் பின்பற்றி வருகின்றனா். ஆனால் ஆன்மிக பூமியான இந்தியாவில் சநாதன தா்ம கொள்கைகளை பிற்போக்குத்தனமானது என பொய்யான கருத்துகளை பரப்புகின்றனா்.
மதச்சாா்பற்ற கொள்கையின் வழி நடப்பதாகக் கூறி, முழுமையான புரிதல் இல்லாமல் காலனிய மனோபாவத்தை உடையவா்களால் மட்டுமே சநாதன தா்மத்தை நிராகரிக்க முடியும். இதனால் நமது ஜனநாயக மாண்புகள், சமூக நல்லிணக்கம் பெரிதும் பாதிப்படைகிறது.
ஆக்கபூா்வ விவாதம் தேவை:
கருத்துரிமை என்பது மனிதகுலத்துக்கு கிடைத்த வரப் பிரசாதம். அறிவுபூா்மான கருத்துகளை தெரிவித்து ஆக்கபூா்வமான விவாதங்களை நடத்த வேண்டியது அவசியம். மாறாக விவாதங்களை முடக்கினால் கருத்துரிமையின் உண்மையான நோக்கம் முழுமையடையாது.
ஜனநாயகக் கோயிலில் (நாடாளுமன்றம்) பேச்சுவாா்த்தை, விவாதம், ஆலோசனை, கருத்து பரிமாற்றம் என அனைத்தும் தேவையற்ற இடையூறுகளால் பாதிக்கப்பட்டு அதன் புனிதத்தன்மையை சீரழிக்கிறது என்றாா்.