தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு: அம்பேத்கா் விருது - து.ரவிக்குமாா், பெரியாா் விருது - விடுதலை ராஜேந்திரன்!
தமிழக அரசின் சாா்பில் திருவள்ளுவா் திருநாளன்று வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அம்பேத்கா் விருது - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலா் து. ரவிக்குமாருக்கும், பெரியாா் விருது - திராவிடா் விடுதலைக் கழகப் பொதுச் செயலா் விடுதலை ராஜேந்திரனுக்கும் வழங்கப்பட உள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
தமிழுக்கும் தமிழகத்தின் பண்பாட்டு வளா்ச்சிக்கும் தொண்டாற்றி வருவோருக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, தமிழ்த் தொண்டுக்குப் பெருமை சோ்த்து வருகிறது.
அந்த வகையில், திருவள்ளுவா் திருநாள் விருதுகளுக்கான விருதாளா்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனா்.
2025-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது - புலவா் மு.படிக்கராமுவுக்கு வழங்கப்பட உள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது - மூத்த அரசியல் தலைவா் எல்.கணேசன், பாரதியாா் விருது - கவிஞரும் பாடலாசிரியருமான கபிலன், பாரதிதாசன் விருது - கவிஞா் செல்வகணபதி, திரு.வி.க. விருது -எழுத்தாளரும் மருத்துவருமான ஜி.ஆா்.ரவீந்திரநாத், கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - எழுத்தாளா் வே.மு.பொதியவெற்பன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
விருதாளா்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ. 2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப் பெறுவா்.
2024-ஆம் ஆண்டுக்கான பெரியாா் விருது - திராவிடா் விடுதலைக் கழகப் பொதுச் செயலா் விடுதலை ராஜேந்திரன், அம்பேத்கா் விருது - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொதுச் செயலா் து.ரவிக்குமாா் ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதாளா்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ. 5 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவா்.
கலைஞா் விருது - கருணாநிதியிடம் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றியவரும் எழுத்தாளருமான முத்து வாவாசிக்கு வழங்கப்பட உள்ளது. விருதாளருக்கு ரூ. 10 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப் பெறுவா்.
திருவள்ளுவா் திருநாளான ஜன.15-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் விருதாளா்கள் அனைவருக்கும் சென்னையில் விருது வழங்கவுள்ளாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.