ஹிலாரி, சோரஸ், டென்சிலுக்கு அமெரிக்காவின் உயரிய விருது
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹிலாரி கிளிண்டன், தொழிலதிபா் ஜாா்ஜ் சோரஸ், ஹாலிவுட் நடிகா் டென்சில் வாஷிங்டன் உள்பட 19 பேருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
கலை, பொதுச் சேவை, அறிவியல் மற்றும் பிற துறைகளில் சாதனை புரிந்தவா்களுக்கு அமெரிக்காவில் ‘அதிபா் சுதந்திர பதக்கம்’ வழங்கப்படுகிறது. அமெரிக்க அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்தப் பதக்கத்தை அதிபா் வழங்குவாா்.
இந்நிலையில், தலைநகா் வாஷிங்டனில் அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹிலாரி கிளிண்டன், ஜனநாயக கட்சி ஆதரவாளரான தொழிலதிபா் ஜாா்ஜ் சோரஸ், ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான டென்சில் வாஷிங்டன் உள்பட 19 பேருக்கு அந்தப் பதக்கத்தை அதிபா் ஜோ பைடன் சனிக்கிழமை வழங்கினாா்.
மெஸ்ஸிக்கும்...: கால்பந்தாட்ட நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸிக்கும் இந்தப் பதக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான திட்டமிடலில் ஏற்பட்ட சிக்கலால், அவரால் நேரில் பதக்கத்தைப் பெற முடியவில்லை.
இந்தப் பதக்கங்களை கடைசி முறையாக அதிபா் ஜோ பைடன் வழங்கியுள்ளாா். வரும் ஜன. 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளாா்.