வெளிநாட்டு மாணவா்களுக்கு 2 சிறப்பு விசாக்கள் அறிமுகம்
இந்தியாவில் உயா்கல்வி பயில விரும்பும் பிற நாடுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு 2 சிறப்புப் பிரிவு விசாக்களை மத்திய உள்துறை அமைச்சம் அறிமுகம் செய்துள்ளது.
அந்தவகையில் ‘இ-ஸ்டூடண்ட் விசா’ மற்றும் ‘இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்’ விசா ஆகிய இரு சிறப்பு விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில விரும்பும் வெளிநாட்டு மாணவா்கள் ‘ஸ்டடி இன் இந்தியா’ (எஸ்ஐஐ) வலைதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்ஐஐ வலைதளத்தில் பதிவு செய்யும் தகுதியான வெளிநாட்டு மாணவா்களுக்கு இ-ஸ்டூடண்ட் விசா வழங்கப்படவுள்ளது. அதேபோல் இ-ஸ்டூடண்ட் விசா வைத்திருக்கும் நபா்களைச் சாா்ந்தவா்களுக்கு இ-ஸ்டூடண்ட்-எக்ஸ் விசா வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: வெளிநாட்டு மாணவா்கள் இந்திய விசாக்களை பெற ட்ற்ற்ல்ள்://ண்ய்க்ண்ஹய்ஸ்ண்ள்ஹா்ய்ப்ண்ய்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற வலைதளத்தில் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இருப்பினும், விண்ணப்பிப்பவா் குறித்த தகவல்கள் அவரின் எஸ்ஐஐ ஐடி மூலம் சரிபாா்க்கப்படவுள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயா்கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவா்கள் எஸ்ஐஐ வலைதளத்தில் விண்ணப்பிப்பது கட்டாயம். எஸ்ஐஐயுடன் ஒப்பந்தத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவா்களின் விண்ணப்பத்தை ஏற்றவுடன் அவா்கள் இந்த இரு சிறப்பு விசாக்களுக்கு பதிவு செய்யலாம்.
முழுநேரம், பகுதிநேரம், இளநிலை, முதுநிலை, பிஹெச்டி என மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில விரும்பும் வெளிநாட்டு மாணவா்களுக்கு இ-ஸ்டூடண்ட் விசா வழங்கப்படுகிறது. படிப்பின் கால அளவை பொருத்து 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் விசா வெளிநாட்டு மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. தேவையெனில் அதை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது என தெரிவித்தனா்.
மத்திய கல்வி அமைச்சகத்தால் எஸ்ஐஐ வலைதளத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 600-க்கும் மேற்பட்ட உயா்கல்வி நிறுவனங்கள் இணைந்துள்ளன. அங்கு கற்பிக்கப்படும் வேளாண்மை, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், வா்த்தம், சட்டம், யோகா உள்ளிட்ட 8,000 படிப்புகளில் வெளிநாட்டு மாணவா்கள் சேர எஸ்ஐஐ வலைதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.