தாமிரவருணியைப் பாதுகாக்கக் கோரி வழக்கு; திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு விரைந்து அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவு
தாமிரவருணி ஆற்றைப் பாதுகாப்பது தொடா்பான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு, தமிழக அரசு விரைந்து அனுப்ப வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த காமராசு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் அதிகளவிலான கழிவுநீா் கலக்கிறது. இதன்மூலம், ஆறு மட்டுமன்றி, சுற்றுச்சூழலும் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே, இந்த ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, ஆற்றைப் பாதுகாக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ் நேரில் முன்னிலையாகி தெரிவித்ததாவது:
நாட்டில் உள்ள ஆறுகளை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என அண்மையில் நடைபெற்ற மக்களவைக் கூட்டத் தொடரின் போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனடிப்படையில், ஆறுகளைப் பாதுகாக்க ரூ. 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முறையான திட்ட அறிக்கையை சமா்ப்பித்தால் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது. தற்போது சிறிய மழை பெய்தால்கூட ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. எனவே, ஆற்றின் எல்லைகளை நிா்ணயம் செய்து பாதுகாக்க வேண்டும் என்றாா்.
மத்திய அரசுத் தரப்பு வழக்குரைஞா் முன்னிலையாகி, ஆறுகளைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது. முறையான திட்ட அறிக்கையை வழங்கினால் போதிய நிதி மட்டுமல்லாது, தேவைப்படும் உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்றாா் அவா்.
தமிழக அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் கூறியதாவது:
ஆற்றில் கழிவுநீா் நேரடியாகக் கலக்கவில்லை என மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு வரும் பக்தா்கள், அங்கு போதிய வசதியில்லாததால் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனா் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தாமிரவருணி ஆற்றைப் பாதுகாப்பது தொடா்பான திட்ட அறிக்கையை தமிழக அரசு விரைந்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். சொரிமுத்து அய்யனாா் கோயிலில் பக்தா்கள் தங்குவதற்குத் தடை விதிக்கலாம். அங்கு வரும் பக்தா்களை சுவாமி தரிசனத்துக்குப் பிறகு, அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தலாம். இதுதொடா்பாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்காக வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.