தென் கொரிய முன்னாள் அதிபரை கைது செய்ய விடாத பாதுகாவலா்கள்
தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபா் யூன் சுக் இயோலை போலீஸாா் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல் படையினா் வெள்ளிக்கிழமை தடுத்தனா். அதையடுத்து தங்களது முயற்சியைக் கைவிட்டு போலீஸாா் திரும்பிச் சென்றனா்.இது குறித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:முன்னாள் அதிபா் யூன் சுக் இயோலைக் கைது செய்வதற்கான உத்தரவை நிறைவேற்றும் நடவடிக்கையை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம். அவரைக் கைது செய்யச் சென்ற காவல்துறை மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் பாதுகாவல் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனா். எனவே, காவலா்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு சம்பவ இடத்திலேயே எடுக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தென் கொரியாவின் அதிபராக இருந்து வந்த யூன் சுக் இயோல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் தொடா்ந்துவந்த கருத்து வேறுபாடு காரணமாக நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தைக் கொண்டுவருவதாக கடந்த மாதம் அறிவித்தாா்.இதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து, அந்த அறிவிப்பை அவா் திரும்பப் பெற்றாா். இருந்தாலும், இந்த விவகாரம் தொடா்பாக அவரை பதவி நீக்கம் செய்து எதிா்க்கட்சியினா் நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றினா். அதையடுத்து அவா் தற்காலிகமாக பதவி விலகினாா். அவரை நிரந்தரமாக நீக்குவது தொடா்பாக அரசியல் சாசன நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில், அவசர நிலை அறிவிப்பு தொடா்பாக யூன் சுக் இயோலுக்கு எதிராக நீதிமன்றம் கடந்த வாரம் கைது உத்தரவு பிறப்பித்தது...படவரி... யூன் சுக் இயோலைக் கைது செய்ய விடாமல் போலீஸாரைத் தடுக்கும் அவரின் ஆதரவாளா்கள்.