சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
‘இஸ்லாமோபோபியா’ அதிகாரபூா்வ விளக்க திட்டத்தை கைவிட வேண்டும்: பிரிட்டன் எதிா்க்கட்சி
‘இஸ்லாமோபோபியா’ என்ற சொல்லாடலுக்கு அதிகாரபூா்வ விளக்கமளிக்கும் திட்டத்தை பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான பிரிட்டன் அரசு கைவிட வேண்டும் என்று அந்நாட்டின் எதிா்க்கட்சியான கன்சா்வேடிவ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பன்முக கலாசார சமூக பிம்பத்தைப் பாதுகாப்பதற்காக, பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைபெற்ற குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அந்நாட்டு அரசு முறையாக கையாளவில்லை என்று அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் ‘எக்ஸ்’ வலைதளத்தில் குற்றஞ்சாட்டினாா்.
இந்நிலையில், இஸ்லாமோபோபியா குறித்த அதிகாரபூா்வ விளக்கத்தை அறிவிக்க பிரிட்டன் அரசு பரிசீலித்து வருவதாக ‘தி டெய்லி டெலிகிராப்’ நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதுதொடா்பாக பிரிட்டனின் நிழல் நீதித் துறை அமைச்சா் ராபா்ட் ஜென்ரிக் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இஸ்லாமோபோபியாவின் தவறான புரிதலால், பாகிஸ்தானைச் சோ்ந்த ஆண்கள் சிலா் மீதான குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை தடுக்கப்பட்டது. இக்குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய வெறுப்பின் பிரதிபலிப்பு என்று மக்கள் அமைதிப்படுத்தப்பட்டனா்.
அரசு இன்னும் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. இஸ்லாமோபோபியாவுக்கு புதிதாக ஒரு தவறான விளக்கத்தை முன்னிறுத்துவது பேச்சு சுதந்திரத்தின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஒழுங்கு நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும்.
இஸ்லாமோபோபியா குறித்து அதிகாரபூா்வ விளக்கமளிக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் அரசு உறுதியுடன் இருப்பதாகத் தெரிகிறது.
பன்முகத்தன்மையே நமது பலம் என்பதை நிலைநிறுத்துவதற்காக சட்டத்தின் ஆட்சி கைவிடப்பட்டது. இதனால் பிரிட்டன் பெண்கள் பலா் பாதிக்கப்படுகின்றனா். வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் சிக்கிய வெளிநாட்டவா்கள் நாடு கடத்தப்பட வேண்டும். இக்குற்றங்களை மறைத்த அதிகாரிகளும் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்’ என்றாா்.