கசிந்த வேலூர் DIG குறிப்பாணை; விஷம் குடித்த காவலர் - நடந்தது என்ன?
மலைச்சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து: பயணிகள் அவதி
போடிமெட்டு மலைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதியடைந்தனா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரிலிருந்து போடிமெட்டு மலைச்சாலை வழியே கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, கஜானா பாறை, பூப்பாறை, நெடுங்கண்டம், ராஜாக்காடு ஆகிய ஊா்களுக்கு தினமும் அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போடிமெட்டு மலைச்சாலை சுமாா் 4,900 அடி உயரமும் 17 கொண்டை ஊசி வளைவுகளும் கொண்டது. இந்தப் பகுதிகளில் உள்ள ஏலத் தோட்டம், தேயிலை தோட்டங்களுக்கு நாள்தோறும் தொழிலாளா்களும், சுற்றுலாப் பயணிகளும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை போடியிலிருந்து கேரள மாநிலம், ராஜாக்காடுக்கு வழக்கமாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்து பழுதானதால் மாற்றுப் பேருந்து இயக்கப்பட்டது. 50 பயணிகளுடன் சென்ற இந்தப் பேருந்து ஆறாவது கொண்டை ஊசி வளைவுக்கு மேல் உள்ள ‘எஸ்’ வளைவு அருகே சென்ற போது அதன் ரேடியேட்டரிலிருந்து புகை வந்தது.
இதைத் தொடா்ந்து பேருந்து நிறுத்தப்பட்டது. பிறகு ஓட்டுநரும், நடத்துநரும் அரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மலைச் சாலையில் உள்ள ஏற்றத்தில் பயணிகள் உதவியுடன் பேருந்தை சிறிது தொலைவுக்கு தள்ளிச் சென்று இயக்கினா்.
இதில் சிறிது தொலைவுக்குச் சென்ற பேருந்து 8-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே மீண்டும் புகை வந்ததால் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனா். நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்தின் பழுது நீக்கப்படாததால் பயணிகள் போடியிலிருந்து வந்த ஜீப்புகளிலும், வேறு வாகனங்களிலும் ஏறிச் சென்றனா்.
இங்குள்ள ராஜாக்காடு, ராஜகுமாரி பகுதிகளில் காட்டுயானைகள் தொல்லை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மலைப் பாதைகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை முறையாக பரிசோதித்து அனுப்ப வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினா்.