முட்டாள்தனமானப் பேச்சு: பாஜக வேட்பாளருக்கு பிரியங்கா கண்டனம்!
``மெரினா போராட்டத்தைப் பார்த்த பிறகுதான் புரிந்தது.." -ஜல்லிக்கட்டில் சாதிக்கும் சென்னை வீரா பாய்ஸ்
சென்னையிலும் ஜல்லிக்கட்டு..
பொங்கல் வந்தாலே தமிழர்களுக்கு கொண்டாட்டம். அதுவும், தென்மாவட்ட மக்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம். காரணம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு தான். இந்த ஜல்லிக்கட்டை காண நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆர்வலர்கள் வருவதோடு, வெளிநாட்டிலிருந்தும் வந்து ரசிப்பதை வருடா வருடம் கண்டு வருகிறோம்.
ஜல்லிக்கட்டு, காளை வளர்ப்பு, பயிற்சி, போட்டி என்று பெரும்பாலும் தென் மாவட்டங்களில் மட்டுமே இருந்த நிலை மாறி சமீப காலங்களில் சென்னை போன்ற பெருநகரங்களிலும் அருகில் உள்ள திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு வருடாவருடம் பெருகிவருகிறது. சென்னையின் ஒரு பகுதியான கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளை போட்டிக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கும் "சென்னை வீரா பாய்ஸ்" குழுவினரை தொடர்புகொண்டோம் .
குழுவின் சார்பாக பேசிய சரண் ராஜ் அவர்களிடம் , சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்துகொண்டு ஜல்லிக்கட்டு காளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டோம்.
மெரினா போராட்டத்துக்குப் பிறகு
2014 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மீதான தடையை திரும்ப பெறக்கோரி, 2017 ஜனவரி 8 ஆம் தேதி முதல் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடந்தது. போராட்டங்களின் வீரியம் வேகம் பெற்று தமிழ்நாடு முழுவதும் பரவியது. பல நாள்கள் போராட்டங்களுக்கு பிறகு, ஜல்லிக்கட்டு இறுதியாக ஜனவரி 23 அன்று உள்ளூரில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது, அப்போது தமிழ்நாடு அரசு PCA சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை நிறைவேற்றியது.
மெரினாவில் போராட்டமாமே என்று கூட்டத்தை பார்க்கலாம் என்று நாங்களும் கும்பலாக போனோம். அங்கே போனப்புறம்தான் புரிந்தது " ஜல்லிக்கட்டு " விளையாட்டு அல்ல .. தமிழர்களின் வாழ்க்கை என்று . நாங்க நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அப்பவே ஒரு முடிவுக்கு வந்தோம். நாமளும் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கலாம் என்ற ஆசையில் முதலில் இளம் கன்றுக்குட்டி ஒன்றை வாங்கி வளர்க்க ஆரம்பித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி கொடுக்க ஆரம்பித்தோம். அந்த வகையில் முதல் முறையாக 2023 ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பரிசு வாங்கினோம்.
அவனியாபுரம், அலங்கா நல்லூரில் பரிசு..
அப்புறம் எங்க டீம்ல உள்ளவங்களை கையில புடிக்க முடியல. அனைவருக்கும் ஆர்வம் அதிகமாகி 2024-ல் இன்னொரு காளையை தயார் செய்தோம். அவனியாபுரம், அலங்கா நல்லூர் என இரண்டு இடத்திலேயும் பரிசு வாங்கினோம். சென்னையிலிருந்து வந்து பரிசு வாங்கியதால் எங்க காளைகள் ரொம்ப பெயர் வாங்கி கொடுத்தது. இந்த ஆண்டு மொத்தம் மூணு காளைகள் போட்டிக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன்" என்றார் மகிழ்ச்சியாக.
எந்த வகை காளைகள் நீங்கள் வளர்க்கிறீர்கள் என்று கேட்டோம் எங்களோட `வீரா' தேனிமறை வகையும், `வெற்றி சூரா' மற்றும் `பிளாக் பாண்டி' இரண்டும் புலிக்குளம் வகையைச் சார்ந்தது என்றவரிடம் பயிற்சிகள் குறித்து கேட்டோம். சென்னை மாதிரி நகரங்களில் பயிற்சி கொடுப்பதற்கு ரொம்பவே கஷ்டமாக தான் இருக்கிறது, நீச்சல் பயிற்சிக்கு இங்கிருந்து புழல் ஏரிக்கு அழைத்துச் செல்கிறோம்.
`இரவு நேரங்களில் இரண்டு கயிறு கட்டி பத்திரமாக பயிற்சிகளை கொடுத்து வருகிறோம்' என்றவரிடம் மதுரை பக்கம் காலங்காலமாக இதை செய்து வருவதால் அவர்களுக்கு இது தொழில் மாதிரி. ஆனா, புதுசா உங்களை போன்ற ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் புதுசா இருக்குமே என்றோம். "ஆமாம். மதுரைதிருமங்கலம், செங்கப்படை கிராமத்தில் இருந்து முத்துகுரு அவர்களிடம் அவ்வவ்போது ஐடியா கேட்டுப்போம். அவரோட சப்போர்ட் இல்லைன்னா எங்களால இவ்வளவு தூரம் வந்து இருக்க முடியாது" என்றவரிடம்,
`சென்னை வீரா பாய்ஸ்' என்ற ஒரு டீம்..
செலவு குறித்து கேட்டோம். "சாதாரண வேளைகளில் குறைந்தது பத்தாயிரம் ரூபாயாவது ஒரு காளைக்கு செலவாகும். இதுபோன்ற போட்டி நேரங்களில் எப்படியும் இருப்பதாயிரமாவது ஆகும்" என்றவரிடம், எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டால், "ஆர்வமும் ஆசைப்பட்ட துறையும் ஒண்ணா இருந்தா செலவு ஒரு பொருட்டே இல்லை" என்றார் .
உங்களோட டீம் பற்றி சொல்லுங்களேன் என்றோம், "நாங்க மொத்தமாக 20 பேர் இருக்கோம். சிவில் என்ஜினீயர், ஐ.டி-ல வேலை பார்க்குறவங்க, சொந்தமாக பிசினஸ் செய்யறவங்க , கல்லூரி மாணவர்கள் என்று வெவ்வேறு பகுதிகளில் இருந்து `சென்னை வீரா பாய்ஸ்' என்று ஒரு டீம் உருவாக்கி நம் தமிழ் பாரம்பரியத்தை காக்க ரொம்பவே மெனக்கெடுறோம்" என்றார் .
மதுரை பக்கம் கொஞ்சம் ஸ்பெஷல் உணவு..
காளைகளுக்கு கொடுக்கும் உணவுகள் குறித்து கேட்டோம். "நாம் சென்னைக்குள் இருப்பதால் பசும்புல் கூட மாதவரம் கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளில் இருந்து வாங்கி வருகிறோம். வைக்கோல், பருத்தி, புண்ணாக்கு போன்றவற்றை, அரக்கோணம், திருவள்ளுர் போன்ற இடத்திலிருந்தும் வாங்குகிறோம். இது போன்ற போட்டி நேரங்களில் கொஞ்சம் ஸ்பெஷல் உணவுகளை மதுரை பக்கம் இருந்தெல்லாம் வரவைக்கிறோம்" என்றார்.
எங்க சித்திக்கு ஒரே கயிறு போதும்..
எல்லோரும் அவரவர்கள் வேளைகளில் இருந்தாலும், குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது வந்து காளையை பார்த்திடுவோம். குறிப்பா இது மாதிரி போட்டிகளுக்கு தயார் ஆகும்போது எல்லோரும் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு சொந்த வேலையை விட்டுட்டு காளைகள் கூடவே இருப்போம். ஆனால் வருஷம் முழுவதும் இவற்றை கவனிப்பது எங்களோடு சித்தி டில்லியம்மாள் மற்றும் ஒத்தாசையாக அவங்க குட்டி பொண்ணு நிலாயினி தான். காளைகளை வெளியில் கூட்டிட்டு போகும் போது எங்களுக்காவது இரண்டு கயிறு தேவைப்படும் ஆனால் எங்க சித்திக்கு ஒரே கயிறு போதும், அசால்ட்டாக மேனேஜ் பண்ணுவாங்க என்றார்.
வீரா, சூரா..
ஜல்லிக்கட்டு காளையின் வளர்ப்பு, பயிற்சியில் ஏற்பட்ட நெகிழ்வான சம்பவம் பற்றி கேட்டால், "முதல் முறை அவனியாபுரம் வாடிவாசலை தாண்டி வெகு தூரம் போன காளையை ஓடி போய் பிடிக்க முடியல, வீரா என்று கும்பலாக கத்தினோம் அப்படியே நின்னுடுச்சி. அதே மாதிரி அவனியாபுரத்தில் வெற்றி சூரா விற்கு பயங்கர மூர்க்கத்தனம் வந்துடுச்சி அதை சமாதானம் செய்ய எங்களுக்கு நாள் முழுதும் சரியாய் போச்சு" என்றார்.
தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்க கிராமம் மட்டுமின்றி சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் இளைஞர்களிடையேயும் ஆர்வம் இருப்பதை பார்க்கும்போது தமிழும் அழியாது, தமிழ் பாரம்பரியமும் அழியாது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.