"காவல் துறையின் அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது.." - சு.வெங்கடேசன் கோபத்தின் ...
Jallikattu: அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பதிவு செய்த 12,632 காளைகள், 5,347 வீரர்கள்
தமிழர்களின் உற்சாகத் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடைபெறும். அதில் முக்கியமாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரபலமானவை.
அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் வருகின்ற 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேட்டிலும், 16 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் கலந்துகொள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில் கடந்த 6 ஆம் தேதி மாலை 5 மணிக்குத் தொடங்கி 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு நடைபெற்றது.
இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளை உரிமையாளர்களும், 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டும் பங்கேற்க 5,786 காளை உரிமையாளர்களும், 1698 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து பாலமேடு போட்டியில் 4820 காளை உரிமையாளர்களும், 1914 வீரர்களும், அவனியாபுரம் போட்டியில் 2026 காளை உரிமையாளர்களும், 1735 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்
ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யப்பட்ட காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவுவும் QR CODE உடன் கூடிய ஆன்லைன் டோக்கன் அனுப்பி வைக்கப்படும்.
அதனை டவுன்லோட் செய்து போட்டி நடைபெறும் இடத்தில் காண்பித்த பின்பு அனுமதிக்கப்படுவார்கள், விதி மீறலை தடுக்கும் வகையில் கியூ ஆர் கோடுடன் கூடிய டோக்கன் பதிவிறக்கம் செய்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்ட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போலியான டோக்கன்களை பயன்படுத்துவது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது