”திமுக அரசை அதன் கூட்டணிக் கட்சிகள் மயிலிறகால் மென்மையாக எதிர்க்கின்றன” - செம்மலை காட்டம்
தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு, தி.மு.க மேயர் சண்.இராமநாதன் செய்கின்ற முறைகேடுகள் உள்ளிட்டவற்றைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தபால் நிலையம் எதிரே கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செம்மலை, தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர் மா.சேகர், மாநகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அருளானந்தம்மாள் நகரில் பள்ளிக்கூடம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தி.மு.க மாநகராட்சி மேயர் சுயலாபத்தோடு மனை பிரிவுகளாக மாற்றுவதற்கு மாமன்றத்தில் ஒப்புதல் அளித்தும், மேயர் தனது மனைவி பெயரில் மனைபத்திரம் பதிவு செய்துள்ளார். இதற்கு எதிராகத் தனி நபர் ஒருவரால் போடப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ,லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். மாநகராட்சிக்குச் சொந்தமான பல்வேறு இடங்களை ஆதாய நோக்கத்துடன் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கும் மேயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜ் மார்கெட்டில் குடிநீர், கழிவறை வசதி இல்லை. 300 கடைகளில் 150 கடைகள் மட்டுமே செயல்படுகிறது. 60 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அரங்கத்தை லாப நோக்கத்துடன் திரையரங்கமாக மாற்றப்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடை பராமரிப்புப் பணியை முறையாக மேற்கொள்ளாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைகளைக் குறிப்பிட்டு அ.தி.மு.க-வினர் கோஷமிட்டனர்.
இதையடுத்து செம்மலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தி.மு.க ஆட்சியைக் கண்டித்து அதன் கூட்டணிக் கட்சிகளே விமர்சனம் செய்யும் அளவுக்கு ஆட்சியின் நிலை உள்ளது. இருப்பினும், கூட்டணிக் கட்சிகள் தங்களது கண்டனமானது மயிலிறகை வைத்துத் தடவுவது போல் மென்மையாகத்தான் உள்ளது. மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக, தி.மு.க-வில் உள்ள கூட்டணிக் கட்சியினர் தைரியமாக எதிர்க்க வேண்டும். ஆனால் விமர்சிப்பது மட்டும் இன்றி கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும். அப்போது தான் மக்கள் மதிப்பார்கள்.
தி.மு.க ஆட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளது. இதனைப் புரிந்து கொண்டு தி.மு.க.வுக்கு எதிராக உள்ள கட்சிகள் தனித்துப் போட்டியிடாமல் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்தால் தி.மு.கவை எளிதில் வீழ்த்தி விடலாம். இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க வலிமையாக உள்ளது. கட்சி இணைப்பு, ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. திருமாவளவன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தி.மு.கவுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். ஒரு வேளை கம்யூனிஸ்ட் இயக்கத்தை தி.மு.க இரண்டாக உடைத்தது போல், விடுதலைச் சிறுத்தை கட்சியையும் உடைத்து விடுவார்களோ என்ற எண்ணம் திருமாவளவன் மனதில் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது.
பொங்கலுக்கு மக்கள் விரும்புகிற தொகுப்போடு சேர்த்து ரொக்க பணம் கொடுக்க அரசாங்கம் தடுமாறி வருகிறது. ஆளுநர் செயல்பாடு குறித்து அவரை மட்டுமே நாம் குறை சொல்லக்கூடாது. சட்டசபையில் இருந்து ஆளுநர் செல்வதற்கான சூழ்நிலையை, ஆட்சியாளர்கள்தான் உருவாக்கியுள்ளனர். ஆளுநரும்-ஆட்சியும் மோதுகின்ற நிலை இருக்கக்கூடாது' என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...