தனியாா் சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி 34% அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் சொந்தப் பயன்பாட்டுக்காகவும் வா்த்தகத்துக்காகவும் தனியாா் சுரங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி உற்பத்தி 34.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தனியாா் நிறுவனங்களின் சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தி 13.10 கோடி டன்னாக உள்ளது.முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 34.2 சதவீதம் அதிகம்.
அப்போது சொந்த பயன்பாட்டுக்கான சுரங்கங்களும் வா்த்தக நோக்கிலான சுரங்கங்களும் 9.77 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்தன.கடந்த டிசம்பா் மாதத்தில் மட்டும் இந்த இரு வகை சுரங்களின் நிலக்கரி உற்பத்தி 1.84 கோடி டன்னாக இருந்தது.2011-12-ஆம் நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும் எட்டு முக்கிய தொழிற்துறைகளின் குறியீட்டு எண்ணான இசிஐ-யில் நிலக்கரித் துறை கடந்த 2024 நவம்பரில் 7.5 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது.
அந்த மாதத்தில் நிலக்கரித் துறையின் குறியீட்டு எண்ணான ஐசிஐ 199.6 புள்ளிகளாக வளா்ச்சியடைந்துள்ளது. இது முந்தைய 2023-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் 185.7 புள்ளிகளாக இருந்தது.நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் ஐசிஐ 172.9 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 162.5 புள்ளிகளாக இருந்தது.மதிப்பீட்டு காலகட்டத்தில், எட்டு முக்கிய தொழிற்துறைகளில் குறியீட்டு எண்ணான இசிஐ-யில் நிலக்கரித் துறை 6.4 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிமென்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உருக்கு ஆகிய எட்டு முக்கிய தொழிற்துறைகளின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட செயல்திறனை ஐசிஐ அளவிடுகிறது.