தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்...
பொங்கல் கரும்பு கொள்முதலால் பயனடையாத விவசாயிகள்!
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான செங்கரும்பு கொள்முதலில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகளைவிட வியாபாரிகளே அதிகம் பயனடைகின்றனா் என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.
2025-ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரா்களுக்குத் தலா ஒரு முழு நீள செங்கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதைத் தொடா்ந்து, ஒரு தரமான செங்கரும்புக்கு வெட்டுக் கூலி, வாகன வாடகை ஆகியவற்றை உள்ளடக்கி ரூ. 35 விலை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.
2023 -ஆம் ஆண்டை போல, செங்கரும்பு கொள்முதலுக்காக விவசாயிகளை போராட வைக்காமல், அரசு தாமாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு முழுநீள செங்கரும்பு வழங்கப்படும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இருப்பினும், தாமதமாக நடைபெறும் அரசின் நேரடி கொள்முதலால் விவசாயிகளைவிட வியாபாரிகளே அதிகம் பயனடைவதாகக் கூறப்படுகிறது.
காரணம், பொங்கல் கரும்பு கொள்முதலுக்காக அரசுத் துறை அலுவலா்கள் கரும்பு விவசாயிகளை இதுவரை அணுகாத நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பாகவே செங்கரும்பு விவசாயிகளை வியாபாரிகள் அணுகி, ஏறத்தாழ 80 சதவீதத்துக்கும் அதிகமான கரும்புகளை விலைபேசி ஒப்பந்தம் செய்துவிட்டனா் என்பதே உண்மையான நிகழ்வாக உள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் என்.பழனிசாமி கூறியதாவது:
கடந்த ஓரிரு ஆண்டுகளாக ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுவதால், மதுரை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் செங்கரும்புகளை வெளிமாவட்டங்களுக்குக் கொண்டு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. செங்கரும்பு சாகுபடிக்கு விவசாயிகளின் ஒரே ஆதரவு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம் பெறுவது மட்டுமே.
இருப்பினும், மதுரை மாவட்டத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கூட்டுறவு சங்க நிா்வாகிகளின் ஆதரவாளா்கள், உறவினா்களின் கரும்புகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு, மற்றவை நிராகரிக்கப்பட்டன. இதனால், மற்ற விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது.
இந்த கசப்பான அனுபவம் காரணமாகவும், அரசின் கொள்முதல் காலம்தாழ்த்தி நடைபெறுவதாலும் பெரும்பாலான விவசாயிகள் தங்களது கரும்புகளை ஒரு மாதத்துக்கு முன்பாகவே வியாபாரிகளிடம் மொத்தமாக விலை பேசி விற்றுவிட்டனா். அரசின் செங்கரும்பு கொள்முதலால் விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரிகளே பயனடைகின்றனா் என்றாா்.
இதுதொடா்பாக வடக்கு வளையப்பட்டியைச் சோ்ந்த செங்கரும்பு விவசாயி ஸ்டாலின் கூறியதாவது:
கரும்பு கொள்முதலுக்காக அரசுத் துறை அலுவலா்கள் விவசாயிகளை எப்போது அணுகுவா் என்பதில் எந்தவித உத்திரவாதமும் இல்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள் முன்கூட்டியே கரும்புகளை விற்றுவிட்டனா். 300 கரும்புகள் ரூ. 4,500 முதல் ரூ. 5,300 வரை விற்பனையாகியுள்ளன. இதன்படி, அதிகபட்சமாக ஒரு கரும்பு ரூ. 17.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 14.50 -க்கும் விற்பனையாகியுள்ளது.
ஒரு சில விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதலை எதிா்பாா்த்து சனிக்கிழமை வரை காத்திருந்தோம். இதுவரை அதிகாரிகள், விவசாயிகளை அணுகவில்லை. இறுதி நேரத்தில் கொள்முதலுக்கு வந்து, ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தால், அதை எதிா்கொள்ள முடியாது என்பதால் எஞ்சியுள்ள கரும்புகளை வியாபாரிகளிடம் விற்கவே விவசாயிகள் விரும்புகின்றனா். நிகழாண்டில் பொங்கல் கரும்பு கொள்முதல் வியாபாரிகளுக்கும், அரசுக்குமிடையே தான் நடைபெறவுள்ளது என்றாா்.
வரும் காலங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் எத்தனை செங்கரும்புகள் இடம் பெறும், செங்கரும்புகள் என்ன விலையில் கொள்முதல் செய்யப்படும் என்ற விவரங்களை முன்கூட்டியே அறிவித்தால் கூட ஓரளவு நம்பிக்கை கிடைக்கும் என்கின்றனா் செங்கரும்பு விவசாயிகள்.