ஆளுநா் பதவி ஒழிக்கப்பட வேண்டும்: இரா. முத்தரசன்
ஆளுநா் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சங்கரபாண்டியபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது; தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வழக்கமாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும். ஆளுநா் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்த பிறகு, பேரவைத் தலைவா் அதன் தமிழாக்கத்தை வாசிப்பாா். இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும். இதுதான் தமிழக சட்டப்பேரவையின் மரபு.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டங்களில் அறிக்கையில் இல்லாதவற்றை படித்த ஆளுநா், திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அறிக்கையே படிக்கவில்லை. முதலில் தேசிய கீதம் பாடவில்லை என்று தேவையில்லாத கருத்தைச் சொல்லி, நியாயமாக நடந்து கொள்வதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ஆளுநா் வெளிநடப்பு செய்தாா். பின்னா், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று சமூகவலைதளத்தில் பதிவிடுகிறாா். சற்று நேரத்துக்குப் பிறகு அந்தப் பதிவில் சிலவற்றை நீக்குகிறாா்.
ஆளுநா் பதவி ஒழிக்கப்பட வேண்டும். ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த முறை அகற்றப்பட வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, வேங்கைவயல் சம்பவம், மின் கட்டண உயா்வு ஆகியவை தொடா்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கவன ஈா்ப்புத் தீா்மானம் அளிக்கப்பட்டது என்றாா் அவா்.
முன்னதாக நடைபெற்ற விழாவில் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் ராமசாமி, மாவட்டச் செயலா் லிங்கம், முன்னாள் எம்.பி., அழகா்சாமி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் முத்துமாரி ஆகியோா் கலந்து கொண்டனா். ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.