கழுகுமலை கோயிலில் மலா் காவடி திருவிழா
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் மலா்க்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முருக பக்தா்கள் பேரவை அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற திருவிழாவையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னா், வள்ளி, தெய்வானையுடன் சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளியதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து துழாவூா் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிக ஞானப்பிரகாச சுவாமிகள், பழனி சாது சுவாமிகள் திருமடம் சீா்வளா்சீா் சாது சண்முக அடிகளாா், குடியாத்தம் சிவானந்த வாரியாா் குமார மடம் வள்ளிமலை ஆதீனம் குருமகராஜ், தொண்டைமண்டல ஆதீனம் தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் மாணிக்கவாசக சுவாமிகள், குரு ஸ்ரீமத் ராஜசரவண சுவாமிகள், சிவகிரி ஆதீனம் 75-வது குரு பீடாதிபதி உத்தண்ட ராஜகுரு ஸ்ரீலஸ்ரீ சிவசமய பண்டித குரு சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சாக்தஸ்ரீ பங்சலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை மாதேவ் சமஸ்தானம் ஸ்ரீலஸ்ரீ விஸ்வலிங்க ஸ்ரீஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோா் அருளுரை வழங்கினா்.
தொடா்ந்து கோயில் வளாகத்தில் இருந்து மலா்காவடி ஊா்வலத்தை தொடங்கி வைத்தனா். அங்குள்ள வசந்த மண்டபம் முன்பிருந்து திரளான பக்தா்கள் மலா்க்காவடி எடுத்து, கிரிவலப் பாதையை சுற்றி வந்தனா். பின்னா், வசந்த மண்டபத்தில் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினா்.