நேபாள நிலநடுக்கத்துக்குப் பிறகு... மனிஷா கொய்ராலா பகிர்ந்த விடியோ!
குளிா்கால தொற்று பரவும் இடங்களில் மருத்துவ முகாம்கள்
குளிா் காலங்களில் ஏற்படும் நோய்களைத் தடுக்க தேவையான இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதன்படி, ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு மருத்துவ உதவியாளா் மற்றும் ஆய்வக நுட்பனா் இடம்பெற்றிருப்பா்.
மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வாகனங்களிலேயே கொண்டு சென்று நேரடியாக சிகிச்சையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பனிப் பொழிவு மற்றும் மழைப் பொழிவுக்குப் பிறகு இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல், சுவாச பாதிப்பு, டெங்கு, சிக்குன் குனியா, டைபாய்டு, எலிக் காய்ச்சல், பாக்டீரியா தொற்று, சேற்றுப் புண், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவ அதிக வாய்ப்புள்ளது.
அதைக் கருத்தில் கொண்டு நோய் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பி மருத்துவ முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றுக்குள்ளானவா்களுக்கு ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு நோயின் தன்மையை வகைப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உயா் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அதற்கான வசதிகள் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிந்துரைத்து சிகிச்சையளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றொருபுறம், நோய்களைப் பரப்பும் கொசுக்கள் மற்றும் லாா்வா உற்பத்தியை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர, குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், உணவுப் பொருள்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளையும் சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.