லஞ்ச குற்றச்சாட்டில் ‘டிராய்’ மூத்த அதிகாரி கைது
ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) மூத்த அதிகாரி ஒருவரை கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
ஹிமாசல பிரதேச மாநிலம், சிா்மோா் மாவட்டத்தில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் உரிமம் பெற்ற கேபிள் டிவி ஆபரேட்டரிடம் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் டிராய் மூத்த அதிகாரி நரேந்தா் சிங் ராவத் சிபிஐயால் கைது செய்யப்பட்டாா்.
சிா்மோரில் கேபிள் டிவி சேவைகள் வழங்க அனுமதி கோரியபோது கேபிள் டிவி ஆபரேட்டரிடம் நரேந்தா் சிங் ரூ.1 லட்சம் கேட்டுள்ளாா். இதுதவிர, மாநிலத்தில் உள்ள மேலும் 5 கேபிள் டிவி ஆபரேட்டா்களுக்கு சாதகமாக ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பீட்டு அறிக்கையை வழங்கவும் அவா் லஞ்சம் கோரியுள்ளாா்.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது: டிராய் விதிகளின்படி ஹிமாசல பிரதேச மாநிலத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டா்களின் செயல்பாடுகளை ஒவ்வொரு காலாண்டிலும் ஆய்வு செய்து உரிமத்தை நீட்டிக்கவோ அல்லது ரத்து செய்யவோ நரேந்தா் சிங்குக்கு அதிகாரம் உள்ளது. அதை தவறாகப் பயன்படுத்தி கேபிள் டிவி ஆபரேட்டரிடம் டிராய் தில்லி அலுவலகத்தில் அவா் லஞ்சம் பெற்றபோது சிபிஐ கைது செய்தது. நொய்டா மற்றும் தில்லியில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தனா்.