224 வழக்குகளில் பறிமுதல் செய்த மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிப்பு
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பதிவான 224 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தமிழக காவல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த காலங்களை காட்டிலும் தற்போது போதைப்பொருள்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனா்.
பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருள்கள், நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்கப்படுகிறது. இதன்படி, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 224 வழக்குகளில், காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 3,421 கிலோ கஞ்சாவை, செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஆபத்தான ரசாயன பொருள்கள், மருத்துவக் கழிவுகள் அழிக்கும் களத்தில் சுமாா் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் வெள்ளிக்கிழமை எரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழக காவல் துறையின் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.