பாலஸ்தீன மாணவி சுட்டுக்கொலை!
மேற்கு கரைப்பகுதியின் ஜெனின் நகரத்தில் பாலஸ்தீன மாணவி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஜெனின் நகரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வரும் போராளி குழுக்களுக்கு எதிராக பாலஸ்தீன அதிகாத்துவத்தின் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (டிச.28) ஜெனினிலுள்ள தனது வீட்டில் தனது தாயாருடனும், இரண்டு குழந்தைகளுடனும் இருந்த ஊடகவியல் மாணவியான ஷாஸா அல்-ஸப்பாக் (வயது-22), மறைந்திருந்து சுடப்பட்ட துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பலியானார்.
இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீனப் பாதுகாப்புப் படையினர் தான் காரணம் எனப் பலியான மாணவியின் தாயர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: தென்கொரியா: விமான விபத்து பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு!!
இதுகுறித்து, பாலஸ்தீனப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த மாணவி போராளி குழுவினரால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்த நேரத்தில் எந்தவொரு போராளி குழுவும் அங்கு இல்லை எனவும் தங்களது பெண்ணை பாலஸ்தீனப் பாதுகாப்புப் படையினர்தான் வேண்டுமென்றே சுட்டுக்கொன்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாலஸ்தீனப் பாதுகாப்பு படை பெரும்பாலும் இஸ்ரேலின் ஆதரவோடு அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதினால் காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் பெரும்பாலும் அந்த அமைப்புக்கு ஆதரவு அளிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.