பாமக: `எங்களுக்கு எல்லாமே ஐயாதான்.. இது உள்கட்சிப் பிரச்னை!’ – ராமதாஸை சந்தித்தபின் அன்புமணி பேட்டி
புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மருத்துவர் ராமதாஸ், ``அன்புமணிக்கு உதவியாக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவிக்கிறேன்” என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, ``அவன் கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. அவனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா? அவனுக்கு என்ன அனுபவம் இருக்கும்? கட்சியில் இருக்கும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுங்கள்.
களத்தில் நல்ல திறமையான ஆட்கள் வேண்டும் என்று கூறுகிறேன்” என்று ஆவேசமானார் அன்புமணி. அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டுப் பேசிய மருத்துவர் ராமதாஸ், `யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது.
அதையடுத்து சென்னை பனையூரில் புதிதாக அலுவலகம் திறந்திருப்பதாகவும், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தன்னை அங்கு வந்து சந்திக்குமாறும் கூறிவிட்டு வெளியேறினார் அன்புமணி. பொதுக்குழு கூட்ட மேடையில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ராமதாஸும், அன்புமணியும் கருத்து மோதலில் ஈடுபட்ட நிகழ்வு அக்கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதையடுத்து கட்சியின் முன்னணி நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள். அதன் ஒரு பகுதியாக கௌரவத் தலைவரான ஜி.கே.மணி தலைமையில் ஒரு சந்திப்பு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து சேலம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், வன்னியர் சங்கத்தின் மாநிலச் செயலாளரான கார்த்தி, நேற்று இரவு தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸை சந்தித்தார்.
அதையடுத்து நேற்று இரவே பனையூர் சென்று அன்புமணி ராமதாஸையும் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து இன்று காலை மீண்டும் தைலாபுரம் வந்த கார்த்தி, அன்புமணியிடம் பேசிய விஷயங்கள் குறித்து மருத்துவர் ராமதாஸிடம் தெரிவித்தார். இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கிய முன்னணி நிர்வாகிகள், இன்று அன்புமணி அவர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து, ராமதாஸை சந்திப்பார் என்று தெரிவித்திருந்தனர்.
அதேபோல இன்று காலை பனையூரில் இருந்து கிளம்பிய அன்புமணி, தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்தார். அப்போது ஜி.கே.மணி, கார்த்தி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் அருகில் இருந்தனர். ராமதாஸும், அன்புமணியும் அருகருகே அமர்ந்திருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.
அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், ``கட்சியின் வளர்ச்சி, 2026 தேர்தல் திட்டங்கள், சித்திரை முழு நிலவு மாநாடு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான போராட்டங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவர் ஐயாவிடம் விவாதித்தோம்.
பொதுக்குழுவில் நேற்று நடந்தது எங்கள் கட்சியின் உள்கட்சிப் பிரச்னை. எங்கள் கட்சிப் பிரச்னை குறித்து நாங்கள் பேசிக் கொள்கிறோம். பா.ம.க ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால், அதில் காரசாரமான விவாதங்கள் இருக்கும். அதுகுறித்து யாரும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.
அதையடுத்து நேற்று பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ``எங்களுக்கு எல்லாமே, எப்போதுமே ஐயா ஐயாதான்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.