மணிப்பூர் கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
மணிப்பூர் மாநிலத்தின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் இன்று (ஜன.1) அதிகாலை கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காங்போக்வி மாவட்டத்தின் மலைகளில் பதுங்கியிருந்த கிளர்ச்சியளர்கள், அதற்கு கீழுள்ள மேற்கு இம்பால் மாவட்டத்தின் கடாங்பாண்டு கிராமத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் பயங்கர ஆயுதங்களைக் கொண்டும், குண்டுக்களை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ள கிராமவாசிகளும், பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தி சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படிக்க: மூன்று வகை வங்கிக் கணக்குகள் இன்றுமுதல் மூடல்!
இந்த தாக்குதலில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டாலும், அந்த கிராமத்தின் குடிசைவீடுகளில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் துவங்கிய கலவரத்திலிருந்து கடாங்பாண்டு கிராத்தில் கிளர்ச்சியாளர்கள் பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.