“தேவையற்ற ரிஸ்க்...” யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் குறித்து முன்னாள் இந்திய கேப்டன்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனது தேவையற்ற ரிஸ்க் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று (டிசம்பர் 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 118 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே ரன் எடுப்பதில் ஏற்பட்ட குழப்பத்தில் ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார்.
இதையும் படிக்க: 2024 - டி20 சாம்பியன் முதல் உலக செஸ் சாம்பியன் வரை... முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!
தேவையற்ற ரன் அவுட்
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனது தேவையற்றது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இது மிகவும் வேகமாக ஓடக் கூடிய ரன். விராட் கோலி போன்ற வீரர் ஒருவரால் அதனை எளிதாக ஓடிவிட முடியும். ஆனால், விராட் கோலி ஃபீல்டரை கவனித்துக் கொண்டிருந்ததால் ரன் எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டது. நீங்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். ரன்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த சூழ்நிலையில் அவசரமாக ரன் எடுக்க வேண்டும் என்ற தேவை உண்மையில் இல்லை என்றார்.
இதையும் படிக்க: ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆட்டத்தின் மிகப் பெரிய தருணம்: ஸ்டீவ் ஸ்மித்
ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் 36 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.