சொத்து விவரங்களை சமர்பித்த தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - ஆர்.டி.ஐ ஆர்வலர் பகிரும் தரவுகள்!
"தமிழ்நாட்டில் கிராம உதவியாளர் முதல் உயர் அதிகாரி வரை சொத்து விவரங்களை வெளிப்படுத்த தயங்கும் நிலையில் 310 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது பாராட்டும் வகையில் உள்ளது" என்கிறார் ஆர்.டி.ஐ ஆர்வலர் நெல்பேட்டை ஹக்கீம்.
இதுகுறித்து அவர் பேசும்போது, "அரசு அலுவலகங்களில் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றவர்களே உயர் பொறுப்பில் அமர்த்தப்படுவார்கள். அப்படி தலைமை பொறுப்பில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காக ஆண்டுக்கு ஒருமுறை அவர்களின் அசையும், அசையா சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதை ஏற்று ஒவ்வொரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் தங்கள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாண பத்திரத்தில் பதிவு செய்துள்ள சொத்து விவரங்களை பார்ப்பது போல் இங்கும் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் தற்போதைய கனக்குப்படி 333 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியில் உள்ள நிலையில், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உட்பட 310 பேர் சொத்து விவரங்களை சமர்பித்துள்ளார்கள். அதில் தங்கள் பெயரில் சொத்து இருப்பதாக 89 பேரும், தங்கள் பெயரில் சொத்து இல்லை என்று 74 பேரும், பெற்றோர், மனைவி அல்லது கணவன், பிள்ளைகள் என தங்களை சார்ந்திருப்பவர்களின சொத்துகளை 147 பேர் பதிவு செய்துள்ளனர். தங்களிடம் உள்ள சொத்துகள் மூலம் மாத வருவாய் வருவதாக 104 பேர் கணக்கு காட்டியுள்ளனர்.
ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, தனது ஓராண்டு சம்பளத்தைவிட, கூடுதலாக வாடகை வருவாய் (ரூ 25, 20,000) வருவதாகவும், இன்னொரு அதிகாரி 35 லட்சம் ரூபாய் சொத்து மூலம் ஆண்டுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருவாய் வருவதாகவும், இன்னொரு அதிகாரியோ 36 லட்சம் ரூபாய் சொத்து மூலம் ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாய் வருவாய் வருவதாகவும், மற்றொரு பெண் அதிகாரி 3 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம் மூலம் ஆண்டுக்கு 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வருவாய் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தலைமைச்செயலாளர் முருகானந்தம், தன் பெயரிலும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான மனைவி சுப்ரியா சாகு பெயரிலும் உள்ள சொத்துகள் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வருவாய் வருவதாக தெரிவித்துள்ளார்கள். மாநில தேர்தல் துறை செயலாளராக உள்ள கே.சுப்பிரமணியம், தனது வங்கி கணக்கு இருப்பு, இன்சூரன்ஸ் பாலிசி, தங்கள் நகைகளின் விவரம் என அனைத்தையும் தெரிவித்துள்ளார்.
சொத்து விவரங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும், அசையா சொத்துகளை அரசு மதிப்பீட்டுன்படியே தெரிவித்துள்ளனர், சந்தை மதிப்பில் தெரிவிக்கவில்லை.
அதே நேரம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே சொத்து விவரங்களை வெளியிடும்போது மாநிலத்தில் உள்ள கிராம உதவியாளர் முதல் அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளரின் சொத்து விவரத்தை ஆர்.டி.ஐ மூலம் கேட்ட நபருக்கு, தனி நபரின் தகவலைத் தர முடியாது என அந்த துறையினர் மறுத்துள்ளனர், அதை எதிர்த்து ஆர்.டி.ஐ ஆர்வலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில், 'அரசு ஊழியர்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை வழங்க எந்த தடையும் இல்லை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுபோன்ற தகவல்களை வழங்க மறுப்பது சட்ட விரோதம்' என்று நீதிபதிகள் தெளிவாக தெரிவித்துள்ளனர்.
அதனால், மேலே தெரிவிக்கபட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போல அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும்" என்றவர், "தமிழ்நாட்டுக்கு தேவைப்படும் குடிமைப்பணி அரிகாரிகளின் எண்ணிக்கை 394 ஆகும். நேரடியாக 231 பேரும், பதவி உயர்வு மூலம் 102 பேர் என 333 பேர் தற்போது உள்ளனர். இதில் 52 சதவிகிதம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே., அடுத்த 5 ஆண்டுகளில் 76 பேர் ஓய்வு பெறுகிறார்கள்" என்ற தகவலையும் தெரிவித்தார்.