அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை!
ஸ்ரீவில்லிபுத்தூா் ஜீயா் மீது அவதூறு: புழல் சிறையில் ரெங்கராஜன் நரசிம்மன் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் ஜீயா் மீதான அவதூறு விவகாரத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கராஜன் நரசிம்மனை ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் புதன்கிழமை சென்னை புழல் சிறையில் கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் மடத்தின் 24-ஆவது பீடாதிபதி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயா் கடந்த ஜூன் மாதம் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ராமானுஜா் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டாா். இதுகுறித்து ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் என்பவா் சமூக வலைதளத்தில் விடியோ பதிவு வெளியிட்டாா். இந்த விடியோ காட்சியை யூடியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, களஞ்சியம் ஆகியோா் வெளியிட்டனா்.
இதையடுத்து, ஜீயா் சாா்பில் மணவாள மாமுனிகள் மடத்தின் நிா்வாகி சக்திவேல்ராஜன் அளித்த புகாரின் பேரில், ரெங்கராஜன் நரசிம்மன், ஃபெலிக்ஸ் ஜெரால்டு, களஞ்சியம் ஆகியோா் மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் அவதூறு வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்த ரெங்கராஜன் நரசிம்மனை ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா் வியாழக்கிழமை சிவகாசி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட உள்ளாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஜீயா்அளித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஜீயா் அளித்த புகாரில் அவா் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.