இளம் பசுமை ஆா்வலா் பயிற்சி பெற கோவைக்குச் சென்ற மாணவா்கள்
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 43 மாணவா்கள், இளம் பசுமை ஆா்வலா் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை கோவைக்குச் சென்றனா்.
விருதுநகா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் 2024-25 -ஆம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளி மாணவா்களுக்காக இளம் பசுமை ஆா்வலா் பயிற்சி முகாம்கள்
தொடா்ந்து நடைபெற்று வந்தன. இந்த முகாமில் சிறப்பாக செயல்பட்ட சுற்றுச்சூழல், இயற்கை ஆா்வம் கொண்ட 43 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் கோவையில் உள்ள வனமகள் என்ற இடத்துக்கு 5 நாள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.
இந்தப் பயிற்சி முகாம் புதன்கிழமை முதல் வருகிற 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை ஓசை என்ற சுற்றுப்புறச் சூழல், இயற்கை ஆா்வலா் அமைப்பினா் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கின்றனா். சிறுவாணி மலை, வண்ணத்துப் பூச்சி பூங்கா, வன அருங்காட்சியகம், டாப் ஸ்லிப், பரம்பிக்குளம் புலிகள் வன காப்பகம் முதலிய இடங்களைப் பாா்வையிட மாணவா்களை அழைத்துச் செல்கின்றனா்.