துணை முதல்வர் : பற்ற வைத்த பாமக; தவிர்த்த துரைமுருகன் - அப்செட்டில் இருக்கிறாரா ...
Sonu Sood: ``இதற்காகத்தான் எனக்கு வந்த முதல்வர் பதவி ஆஃபரை மறுத்தேன்'' - நடிகர் சோனு சூட் ஓபன் டாக்
பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனு சூட், Fateh என்ற பாலிவுட் படத்தின் மூலம் இயக்குநராகவும் பாலிவுட்டில் தடம் பதிக்கவிருக்கிறார். இவரே தயாரித்து நடிக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால், இவையெல்லாவற்றையும் விட, கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், தொடர்ச்சியாக ஏழை எளியோர்க்கு உதவி செய்ததன் மூலம் சிறந்த மனிதராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இப்போதும், ஒரு சினிமா பிரபலம் என்பதைத் தாண்டி, தொடர்ச்சியாக தான் செய்துவரும் உதவிகள் மூலம் பல இடங்களில் பாராட்டப்படுகிறார். இந்த நிலையில், தனக்கு முதல்வர் பதவி ஆஃபர் வந்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் சோனு சூட் தெரிவித்திருக்கிறார்.
Humans of Bombay ஊடகத்துடனான நேர்காணலில் பேசிய சோனு சூட், ``எனக்கு முதல்வர் பதவி ஆஃபர் வந்தது. அதை நான் மறுத்தபோது, துணை முதல்வராகச் சொன்னார்கள். நாட்டிலுள்ள பெரிய நபர்கள் கூட ராஜ்ய சபா சீட் ஆஃபர் கொடுத்தார்கள். இவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார்கள். ஆனால், நான் எதற்காகவும் அரசியலில் போராடவேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற பெரிய நபர்கள், உங்களை அணுகி உலகில் மாற்றத்தை ஏற்படுத்த ஊக்குவிக்க விரும்புவது ஒரு உற்சாகமான நிலை.
இருப்பினும், எனது சுதந்திரத்தை நான் இழக்க விரும்பாததால், அரசியலிலிருந்து விலகியிருக்க விரும்பினேன். பொதுவாக இரண்டு விஷயங்களுக்காக அரசியலில் சேர்கிறார்கள். அது பணம் அல்லது அதிகாரம். ஆனால், எனக்கு இந்த இரண்டிலும் ஆர்வம் இல்லை. பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக என்றால், அதை நான் ஏற்கெனவே செய்து கொண்டிருக்கிறேன். அதை யாரிடமும் நான் கேட்க வேண்டியதில்லை. யாருக்காவது நான் உதவ விரும்பினால், நானே சொந்தமாகச் செய்வேன்.
வேறு ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அதற்கு நான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். அது என்னைப் பயமுறுத்துகிறது. எனது சுதந்திரத்தை இழந்துவிடுவோமோ என்று அச்சப்படுகிறேன். அதேசமயம், அரசியலில் சேர்ந்தால் டெல்லியில் வீடு, குறிப்பிடத்தக்க பதவி, உயர் பாதுகாப்பு, அரசு முத்திரையுடன் கூடிய லெட்டர்ஹெட் போன்ற ஆடம்பரங்கள் கிடைக்கும் என்று பலரும் என்னிடம் கூறினார்கள்.
அதைக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்போது நான் தயாராக இல்லை. சில வருடங்களுக்குப் பிறகு நான் வேறுமாதிரி உணரலாம். எனக்குள் இன்னும் ஒரு நடிகர், இயக்குநர் இருக்கிறார். அதேசமயம் நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல. அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன்." என்று கூறினார்.
சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட், கடந்த 2022-ல் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மோகா தொகுதியில் போட்டியிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளர் அமந்தீப் கவுர் அரோராவிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...