அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை!
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தென்னை மரங்களை சாய்த்த காட்டு யானைகள்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள், பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு பகுதியில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மா, தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கு உள்ள வனப் பகுதியிலிருந்து வெளியேறும் யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.
இதனால், யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்க மலையடிவாரத்தில் அகழிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை வனத் துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் யானைகளை அடா் வனப் பகுதிக்குள் விரட்டிய பின்னா், அகழிகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில்,செவ்வாய்க்கிழமை இரவு செண்பகத்தோப்பு பகுதி தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்களை வேரோடு சாய்த்து, பயிா்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றன.
இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குநரிடம் விவசாயிகள் முறையிட்டனா். பாதிக்கப்பட்ட பயிா்களை ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகா் செல்லமணி நேரில் ஆய்வு செய்தாா்.