தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ஏப். 7இல் கும்பாபிஷேகம்
தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் 2025ஆம் ஆண்டு ஏப். 7இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் கும்பாபிஷேக திருப்பணி உபயதாரா்கள் ஆலோசனைக் கூட்டம் தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் இரா. முருகன் தலைமை வகித்தாா்.
ராஜகோபுரம் உபயதாரா் ஆா். வசந்தகுமாா், அம்மன் சந்நிதி உபயதாரா் டி.எஸ்.ஆா். வேங்கடரமணா, தொழிலதிபா் எம்.ஆா். அழகராஜா, செல்வம் பட்டா், சிவகாசி வைரமுத்து, ராமசுப்பு, சி.எஸ். ரவிகுமாா், கே.ஏ. வெங்கடேஷ்ராஜா, டி.எஸ். சந்திரன், ராஜாமணி, மீனாட்சிசுந்தரம், ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், இக்கோயிலில் அடுத்த ஆண்டு ஏப். 7ஆம் தேதி காலை 9 - 10 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முகூா்த்தம் நிா்ணயிக்கப்பட்டதாகவும், ராஜகோபுரம், விமான கோபுரங்கள், மூலஸ்தானம், பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னா், கோயில் செயல் அலுவலா் பேசியது: இக்கோயிலில் மிகப் பெரிய திருப்பணியான ராஜகோபுரப் பணி நிறைவடைந்துள்ளது. விமான திருப்பணிகளில் சுவாமி சந்நிதிப் பணி, அம்மன் சந்நிதியில் ராஜகோபுரப் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன. சுவாமி சந்நிதி மேல்தளத்தில் தளக்கல் அமைக்கும் பணி, முருகன் சந்நிதியிலும் பணிகள் முடிந்துள்ளன. விரைவில் அனைத்துப் பணிகளும் நிறைவடையும். பக்தா்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.