கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
மதுரை: ``வாழும் காலம் வரை இதைச் செய்வோம்.." - எம்ஜிஆருக்கு வண்ணக்கோலமிட்ட தீவிர ரசிகர்!
அரசியலைக் கடந்து எம்ஜிஆரை விரும்புகிறவர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். இவர்கள் எந்தவொரு விளம்பரமும் செய்யாமல் ஆத்மார்த்தமாக எம்ஜிஆர் புகழை பாடிக்கொண்டே இருப்பார்கள், அப்படி ஒருவர்தான் ஜெயக்குமார்.!
புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற புதுச்சேரி சட்டமன்ற பணியாளரான ஜெயக்குமார், ஒரு ரசிகராக எம்ஜிஆர் மீது அளவு கடந்த பற்று வைத்திருப்பவர். அதனால்தான் அவர் மறைவுக்குப்பிறகு எம்ஜிஆரின் ஒவ்வொரு பிறந்த நாள் மற்றும் நினைவு நாளன்று தன் வீட்டின் முன் எம்ஜிஆர் உருவத்தை வண்ணப்பொடிகளால் கோலமிட்டு குடும்பத்துடன் சேர்ந்து வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
புதுச்சேரியிலுள்ள வீட்டில் ஆண்டுதோறும் கோலத்தால் எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தி அப்பகுதி மக்களை கவனிக்க வைத்தவர், கடந்த 24-ஆம் தேதி எம்ஜிஆர் நினைவு தினத்தன்று அஞ்சலி கோலத்தை மதுரையில் நிகழ்த்தினார்.
மதுரை திருப்பாலையில் வசிக்கும் மகள் வீட்டிற்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டதால், வந்த இடத்திலும் தன் அபிமான நாயகனான எம்ஜிஆரின் நினைவு நாளன்று கோல அஞ்சலியை தவற விட்டுவிடக்கூடாதென்று வீட்டு வாசலில் எம்ஜிஆரின் உருவத்தை கோலமிட்டு அஞ்சலி செலுத்தி மதுரை மக்களை கவனிக்க வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "எம்ஜிஆரின் தீவிர ரசிகனான நான், புதுச்சேரி சட்டமன்றத்தில் காவலராக 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். தேர்தல் பிரசாரத்திற்காக எம்ஜிஆர் புதுச்சேரிக்கு வந்தபோது பலமுறை சந்தித்தேன். அவருடைய எளிமையால் ஈர்க்கப்பட்டு அவர் நடித்த ஒவ்வொரு படத்தையும் 20 முறை பார்த்திருக்கிறேன்.
எம்ஜிஆர் மீது நான் மட்டுமல்ல, என் மனைவி ராணி, மகள் மருமகன், மகன், மருமகள், பேரன் என அனைவரும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகிறோம், நாங்கள் வாழ்கின்ற காலம் வரை இதை ஒரு கடமையாக செய்வோம்" என்றார்.