'கோடீஸ்வரி' கெளசல்யா கார்த்திகாவை நினைவிருக்கிறதா... இப்போது எப்படி இருக்கிறார்?
கோடி ரூபாய் வென்ற, கெளசல்யா கார்த்திகா!
தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட கேம்ஷோவில் ஒரு கோடி ரூபாய் வென்ற, கெளசல்யா கார்த்திகாவை யாராலும் மறக்க முடியாது. ஒரு கோடி ரூபாயை அவர் வென்றவுடன், கெளசல்யாவும் அந்த நிகழ்ச்சியை நடத்திய நடிகை ராதிகாவும் இடம்பெற்ற போஸ்டர்கள் சென்னையின் பல இடங்களிலும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது பலருக்கும் நினைவிருக்கும். கூடுதல் சிறப்பாக 'ஹூ வான்ட்ஸ் டு பி எ மில்லியனர்' போட்டிகளில் வென்ற முதல் பெண் மாற்றுத்திறனாளி என்ற வரலாற்றை உருவாக்கியவர், கெளசல்யா கார்த்திகாதான். கெளசல்யா கார்த்திகா மதுரையைச் சேர்ந்தவர்.
கோடீஸ்வரி நிகழ்ச்சியில வெல்லும்போது, 'இந்தப் பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டபோது, 'வீடு வாங்க வேண்டும்' என்கிற தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் கெளசல்யா கார்த்திகா. சொன்னதுபோல மூன்று வருடங்களுக்கு முன்னால் வீடும் வாங்கி விட்டார். அந்த மகிழ்ச்சியை விகடனும் பகிர்ந்திருந்தார் கெளசல்யா.
கெளசல்யா கார்த்திகாவுக்கு செவித்திறன் சவாலும் பேச்சுத்திறன் சவாலும் இருப்பதால், அவரின் சார்பில் அவருடைய கணவர் பாலமுருகன் பேசுகையில், 'அந்த நிகழ்ச்சியில சொன்ன மாதிரியே தான் படிச்ச சிறப்புப் பள்ளிக்கு உதவி செஞ்சாங்க. அடுத்ததா, அவங்க பேரன்ட் வீட்டுக்குப் பக்கத்துலயே இருந்த கேட்டட் கம்யூனிட்டியில வீடு வாங்கிட்டாங்க. கட்டி பத்து வருஷமான பழைய வீடுங்கிறதால, என் கையில இருந்த சேமிப்பையெல்லாம் போட்டு வீட்டோட இன்ட்ரீயரை மாத்தி வீட்டை புதுசு மாதிரி மாத்திட்டேன்' என்றார் மகிழ்ச்சியாக.
கேம்ஷோவுக்குப் பிறகு, எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கெளசல்யாவைப் பார்க்க முடியவில்லையே என்றதுக்கு, ''சில நிகழ்ச்சிகள்ல கெளசல்யாவை கூப்பிட்டாங்க. ஆனா, அவருக்கு அதுல பெரிய விருப்பமில்ல. மதுரை கோர்ட்டில் ஜூனியர் அசிஸ்டென்ட்டா வேலைபார்க்கிறார்ங்கிறதால, வீடு, ஆஃபீஸ், குடும்பம்னு பிஸியாக இருக்காங்க. பையன் வளர்ந்துட்டான். முதலாம் வகுப்பு படிக்கிறான். அவனையும் பார்த்துக்கணுமே ''என்றவர், ''இத்தனை வருஷம் கழித்தும் கெளசல்யாவை 'கோடீஸ்வரி நிகழ்ச்சியில ஜெயிச்சவங்க இவங்க தானே'ன்னு சிலர் கண்டுபிடிச்சிடுறாங்க. அதை தான் தனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாக நினைக்கிறாங்க'' என்றார் மகிழ்ச்சியுடன்.
வீட்டில் விசேஷம் என்று ஃபேஸ்புக்கில் பார்த்தோமே என்றோம். ''ஆமாங்க, கெளசல்யாவோட தம்பிக்கு 15-12-24 அன்று நிச்சயத்தார்த்தம் நடந்துச்சு. குடும்பமா எல்லாரும் நல்லா இருக்கோம்க. எங்களை நினைவு வெச்சு விசாரிக்கிறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க'' என்கிறார் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...