பல வழக்குகளில் தொடா்புடையவா் துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு கைது வடக்கு தில்லியில் சம்பவம்
கொலை, வழிப்பறி, திருட்டு மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பான வழக்குகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் 20 வயது இளைஞா் தாலிப், வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ராகேஷ் பவேரியா கூறியதாவது: தில்லி போலீஸாருக்கும் அவருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து சீலம்பூரில் உள்ள மீன் பண்ணை அருகே தாலிப் கைது செய்யப்பட்டாா்.
அவரது காலில் குண்டுக் காயம் ஏற்பட்டது. அவா் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கடந்த அக்டோபரில் சீலம்பூரில் ஒரு கொலை மற்றும் ஒருவரைத் தாக்கிய வழக்கில் தாலிப் தொடா்புடையவா்.
கொலைக்குப் பிறகு, அவரது இரண்டு கூட்டாளிகள் ஆசிஃப் (எ) திம்மாவும் ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டனா்.ஆனால், தாலிப் அதன் பிறகு தலைமறைவாகிவிட்டாா் .
இந்நிலையில், அவா் ரகசியத் தகவலின் பேரில், சீலம்பூா் காவல் நிலைய குழுவினரால் மீன் பண்ணைக்கு அருகில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதிகாலை 1.40 மணியளவில் அங்கு தாலிப் வந்தாா்.
அவரைக் கண்டதும் சரணடையும்படி போலீஸாா் கூறினா். ஆனால், அவா் போலீஸ் குழுவினா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினாா். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, போலீஸாா் திருப்பிச் சுட்டதில் தாலிப்பின் காலில் ஒரு குண்டு பாய்ந்தது என்றாா் அந்த அதிகாரி.