வாஜ்பாயின் கனவுகளை முன்னெடுக்கிறார் பிரதமர் மோடி: ராஜ்நாத் சிங்
மரம் வெட்டும் சத்தம், துரத்திச் சென்ற வனத்துறை, சந்தன மரங்களை வீசிச் சென்ற கும்பல்; பின்னணி என்ன?
நாட்டின் முதல் பல்லுயிர் பெருக்க வள மண்டலமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் காடழிப்பு, வனவிலங்கு வேட்டை, மரக்கடத்தல் போன்ற வன குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
இவற்றை கட்டுப்படுத்த வனத்துறையினர் தொடர் முயற்சிகள் மேற்கொண்டும் குறைந்த பாடில்லை. அரியவகை மரங்கள் வெட்டப்பட்டு வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு கடத்தும் அவலம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வாகப்பனை அடர்வனப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து மேற்கொண்டபோது அந்தப் பகுதியில் மரம் வெட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. அந்தத் திசை நோக்கி வனத்துறையினர் செல்கையில், மரம் வெட்டும் கும்பல் உஷாராகி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அந்தப் பகுதியில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அந்தக் கும்பல் சந்தன மரங்களை வெட்டியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். சந்தன மரக் கடத்தல் தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி ஒருவர் , " பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நடக்கும் சட்டவிரோதமாக நடக்கும் வனக் குற்றங்களை கண்டறிய நாள்தோறும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
கீழ் கோத்தகிரி வனப்பகுதிக்கு உட்பட்ட வாகப்பனை அடர் வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. சந்தன மரங்களை வெட்டிக் கொண்டிருந்தவர்கள், நாங்கள் செல்வதைக் கண்டு சந்தன மரத் துண்டுகளை அங்கேயே வீசிவிட்டுத் தப்பி ஓடினர்.
இதுகுறித்து விசாரித்ததில் குஞ்சப்பனை பகுதியைச் சேர்ந்த சிவகுமார், சின்ராசு ஆகிய இருவரை கண்டறிந்து விசாரணை நடத்தினோம். அவர்கள் மீது வன வன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தன மரக்கடத்தலில் இவர்களின் பங்கு, இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் யாரிடம் விற்பனை செய்ய இருந்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் " என்றார்.