'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்....
வாடிக்கையாளர்களிடம் ரூ.4.25 கோடி: ஜிஎஸ்டி மோசடி; பெண் கைது
வாடிக்கையாளர்களிடம் இருந்து ஜிஎஸ்டிக்காக பணத்தை பெற்றுக் கொண்டு ரூ.4.25 கோடியைச் செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில், பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு, திருநகர் பகுதியைச் சேர்ந்த மோகன்பாபு. கணக்குத் தணிக்கையாளர். கடந்த 2015-ஆம் ஆண்டு மோகன்பாபுவிடம் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம், குருசாமிபுரத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (எ) முருகன் (34) என்பவர் உதவியாளராகப் பணியில் சேர்ந்துள்ளார்.
இதற்கிடையே மோகன்பாபு மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், தன்னுடைய தொழிலை சரிவர கவனம் செலுத்த முடியாததால், நம்பிக்கைக்குரியவரான முருகனிடம் அவரது வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டி வரி கட்டுவதற்காக ஏதுவாக அவரது வங்கிக் கணக்கு எண், கடவுச்சொல் மற்றும் ஜிஎஸ்டி பயன்பாட்டு அடையாள எண், கைப்பேசி ஆகியவற்றைக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து 2018 முதல் 2020 வரை மோகன்பாபுவின் வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டி வரி கட்டுவதற்காக அனுப்பிய ரூ.4.25 கோடி பணத்தை உரிய முறையில் முருகன் ஜிஎஸ்டி செலுத்தவில்லை. முருகன் அவரது மனைவி சீதாமலர்மதி மற்றும் உறவினர்களுக்கு புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி அந்த கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை அவரே வைத்துள்ளார்.
அந்த வங்கி கணக்குகளுக்கு ரூ.4.25 கோடி அனுப்பி, பின்னர் அந்தப் பணத்தை தனது வங்கி கணக்குக்கு மாற்றிக் கொண்டுள்ளார்.
இதனிடையே வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து சோதனை வந்ததையடுத்து, அவர்கள் மோகன்பாபுவிடம் விசாரணை செய்தபோது, அவரது உதவியாளர் முருகன் அவரது மனைவி சீதாமலர்மதி ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது.
இது குறித்து மோகன்பாபு ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். ஆவடி மத்திய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் வேலு தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முருகனை ஏற்கெனவே கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரது மனைவி சீதாமலர்மதி (33) (படம்) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.