ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்..!
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருந்தது. ஆனால் சமீபகாலமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை கண்டிக்கத்தக்கது.
மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. கைது செய்யப்பட்ட நபர் திமுக பிரமுகர். துணை முதலமைச்சரை சந்தித்து புகைப்படம் எடுக்குமளவுக்கு செல்வாக்கு உள்ளவர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும். பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் வெளியில் தெரிய கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து அதுகுறித்த தகவல்களை கசியவிட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி புகார் அளிக்க முன் வருவார்கள்.
நடிகர் விஜய் வெளியில் வந்து மக்களோடு களத்தில் இருந்து அரசியல் செய்தால் தான் அது அரசியல். எந்த நிலையில் இருந்தாலும் மக்களுடன் நிற்கிறோமா என்பது தான் அரசியல். மக்களோடு நிற்காதவர்களுக்கு மக்கள் எப்போதும் முக்கியமான இடத்தை கொடுக்க மாட்டார்கள்.
சட்டமன்ற உறுப்பினர் நிதியில் திட்டம் கொண்டு வரும்போது, அதை மாநகராட்சி கவுன்சிலர்கள் தடுக்கிறார்கள். இதற்கு மாநகராட்சி அதிகாரிகளும் துணை போகிறார்கள். இதைப்பற்றி மாநகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.” என்றார்.
முன்னதாக அந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகி ஒருவர் வானதி சீனிவாசனை, “அடுத்த ஜெயலலிதா” என்று புகழ்ந்தார். செய்தியாளர்கள் அதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு வானதி, “ஆளை விடு சாமி” என்று கும்பிடு போட்டு சென்றார்.