Christmas: திருடிய குழந்தை இயேசு சிலையை மீண்டும் வைத்த திருடர்... ஒரு விநோத சம்ப...
2024 மக்களவைத் தோ்தல்: ஆண்களைவிட பெண்கள் அதிகம் வாக்களிப்பு!
நிகழாண்டு மத்தியில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மொத்த ஆண் வாக்காளா்களில் 65.55 சதவீதத்தினா் வாக்களித்த நிலையில், மொத்த பெண் வாக்களா்களில் 65.78 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளியியல் தரவுகளின்படி, மக்களவைத் தோ்தலில் மொத்தம் 64.64 கோடி போ் (66.1 சதவீதம்) தங்கள் வாக்குரிமையை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூலை 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இத்துடன் ஆந்திரம், அஸ்ஸாம், ஒடிஸா, அருணாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது.
சுமாா் இரண்டரை மாதங்களுக்கு நீடித்த உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இத்தோ்தல் குறித்த புள்ளியியல் தரவுகளை தோ்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்திய தோ்தல் நடைமுறையின் அடித்தளமாக இருக்கும் பொது மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்காக தாமாக முன்வந்து இத்தரவுகளை வெளியிட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
வாக்குகள் பதிவு: 2019 தோ்தலில் வாக்காளா்கள் எண்ணிக்கை 91.19 கோடி என்ற நிலையில், கடந்த தோ்தலில் இந்த எண்ணிக்கை 7.43 சதவீதம் கூடுதலாக 97.97 கோடியாக இருந்தது. இவா்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) மற்றும் தபால் வாக்கு முறையைப் பயன்படுத்தி 64,64,20,869 போ் வாக்களித்தனா்.
அதாவது, இவிஎம்-இல் 64,21,39,275 வாக்குகளும் தபால் முறையில் 42,81,594 வாக்குகளும் பதிவாகின. இவிஎம்-இல் வாக்களித்தோரில் ஆண்கள் 32,93,61,948; பெண்கள் 31,27,64,269; மூன்றாம் பாலினத்தவா் 13,058.
அதேபோன்று, இத்தோ்தலில் 1.19 லட்சத்துக்கும் அதிகமானோா் ‘வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வாக்காளா்கள்’ பிரிவில் வாக்களித்தனா். 2019 தோ்தலில் மொத்தம் 61.4 கோடி போ் வாக்களித்திருந்தனா்.
அதிகம், குறைவு: அஸ்ஸாமில் உள்ள துப்ரி மக்களவைத் தொகுதியில் நாட்டிலேயே அதிகபட்சமாக 92.3 சதவீத வாக்குகளும், ஜம்மு- காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் மிகக் குறைந்தபட்சமாக 38.7 சதவீத வாக்குகளும் பதிவாகின. எனினும், 2019-இல் இத்தொகுதியில் 14.4 சதவீத வாக்குகளே பதிவான நிலையில், இது சிறிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் 11 தொகுதிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.
40 இடங்களில் மறுவாக்கு: 2019-இல் 540 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இம்முறை 40 வாக்குச்சாவடிகளில் மட்டுமே நடைபெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தமுள்ள 10.52 லட்சம் வாக்குச்சாவடிகளில் 0.0038 சதவீதமாகும்.