திரிபுராவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!
தலைநகர் அகர்தலாவில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!
கடந்த ஆகஸ்டு மாதம் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் வழியாக ஆயிரக்கணக்கான வங்கதேசத்து மக்கள் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர்.
இதைப் போல், தங்களுக்கு எதிராக மியான்மர் நாட்டு ராணுவத்தினால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளிலிருந்தும் இனப்படுகொலையிலிருந்து தப்பிப்பிழைத்த ரோஹிங்கியா மக்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் அகர்தலா ரயில் நிலையத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 87 வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: 2024 பேசும் பொருளான சர்ச்சைகள்: 'மோடி' முதல் 'அம்பேத்கர்'
இதுகுறித்து அகர்தலா ரயில்வே காவல்படையின் தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 24 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் என 100க்கும் மேற்பட்டடோர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் இந்தியாவிற்குள் நுழைய உதவிய 25 இந்தியர்களும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் பிழைக்க வேலைத் தேடி தில்லி, பெங்களூர், ஹைதரபாத் ஆகிய நகரங்களுக்கு செல்வதற்காக திரிபுரா வழியாக இந்தியாவின் உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகள் அங்கிருந்து தப்பித்து இந்தியாவிற்குள் நுழைந்து கண்டுப்பிடிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 5 மாதங்களில் மட்டும் திரிபுராவின் பல்வேறு இடங்களின் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 600 வங்கதேசத்தினர் மற்றும் 63 ரோஹிங்கியா அகதிகள் எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் திரிபுரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.