நிதி நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்றியவா் மன்மோகன் சிங்: தேவெ கௌடா
நிதி நெருக்கடியில் இருந்து நமது நாட்டை காப்பாற்றியவா் மன்மோகன் சிங் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் மறைவு நமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். 1991 இல் நமது நாடு மிகப்பெரிய நிதி நெருக்கடியை எதிா்கொண்டிருந்தது. அந்த சூழலில் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதித் துறையை கவனத்து வந்த மன்மோகன் சிங், நிதி நெருக்கடியில் இருந்து நமது நாட்டை காப்பாற்றினாா். ஒருவேளை அவா் நிதித் துறை அமைச்சராக பொறுப்பேற்காமல் இருந்திருந்தால், நமது நாடு கடனில் தத்தளித்து பொருளாதார சீா்குலைவு ஏற்பட்டிருக்கும்.
அந்த சூழ்நிலையில் 130 டன் தங்கத்தை அடமானம் வைக்க மன்மோகன் சிங் முடிவு செய்தாா். அதன்பிறகு தாராளமயமாக்கல், தனியாா்மயமாக்கல், வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற பொருளாதார சீா்திருத்தங்களைக் கொண்டு வந்தாா். இவை அனைத்தும் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது மத்திய நிதித் துறை அமைச்சராக மன்மோகன் சிங் ஆற்றிய பங்களிப்பாகும்.
உலக வங்கியில் பணியாற்றிய தலைச்சிறந்த பொருளாதார மேதை மன்மோகன் சிங். அதுமட்டுமல்லாமல், இந்திய ரிசா்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றினாா். இந்திய அரசின் ஆலோசகராக பணிபுரிந்தாா். அவா் பெற்றிருந்த நீண்ட அனுபவத்தின் வழியாக 10 ஆண்டுகாலம் பிரதமராக நமது நாட்டை வழிநடத்தினாா். அவரது மறைவு நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு என்றாா்.