Rajasthan: ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து 6 நாள்களாக உயிருக்கு போராடும் சிறுமி... என்ன நடந்தது?
ராஜஸ்தான் மாநிலம் கோத்புத்லி என்ற இடத்தில் உள்ள 700 அடி ஆழ்குழாய் கிணற்றில் 3 வயதாகும் சேத்னா என்ற சிறுமி கடந்த திங்கள் கிழமை தவறி விழுந்துவிட்டார். அவரை மீட்க மாவட்ட நிர்வாகம் கடந்த 5 நாள்களாக போராடி வருகிறது. சிறுமி 150 அடி ஆழத்தில் சிக்கி இருக்கிறாள். அவளை பத்திரமாக மீட்க மாவட்ட நிர்வாகம் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிறுமி தனது தந்தையின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்துவிட்டாள்.
கடந்த சனிக்கிழமைதான் ஆழ்குழாய் கிணறு தோண்டப்பட்டது. போர்வெல் அமைத்தவர்கள் மூடாமல் சென்றுவிட்டனர். முதலில் சிறுமி 15 அடி ஆழத்தில் இருந்தாள். அவளை அவரது குடும்ப உறுப்பினர்கள் வெளியில் எடுக்க முயன்றனர்.
அந்நேரம் சிறுமி மேலும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டாள். மாவட்ட நிர்வாகம் ஆழ்குழாய் கிணற்றுக்குள் ஆக்ஸிஜன் பைப் அனுப்பி இருக்கின்றனர். ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகில் 160 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் கிராம மக்கள் குவிந்துள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு மீடியாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனது மகளை மீட்க வேண்டி விடாது அழுது கொண்டிருக்கும் சிறுமியின் தாயார் தேவி, தனது மகளை காப்பாற்றும்படி கண்ணீர் மல்க மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனது மகள் 6 நாள்களாக சாப்பிடவில்லை. ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்தது மாவட்ட ஆட்சித்தலைவர் மகளாக இருந்தால் இவ்வளவு நாள்கள் விட்டு வைத்திருப்பார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
இது குறித்து சிறுமியின் உறவினர் சுப்ரம் கூறுகையில், "கேள்வி கேட்டால், மாவட்ட ஆட்சித்தலைவர் பதில் சொல்வார் என்று கூறுகின்றனர். ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னும் சிறுமியின் பெற்றோரை சந்தித்து பேசவில்லை. சிறுமியின் தாயார் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார். அவர் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார்" என்றார்.
ஆரம்பத்தில் இரண்டு நாள்கள் ஊழியர்கள் இரும்பு வட்டு மூலம் சிறுமியை வெளியில் எடுக்க முயன்றனர். அதுமுடியாமல் போனதால் அருகில் குழி தோண்ட ஆரம்பித்துள்ளனர். மழை வந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையும் இணைந்து மீட்கும்பணியில் ஈடுபட்டுள்ளது.