100 வயதை கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார் நல்லகண்ணு: முதல்வர் ஸ்டாலின்
சாப்பாடு பரிமாற தாமதம், மணப்பெண்ணை மாற்றி வேறு திருமணம் செய்த மணமகன்... உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்
திருமணம் என்றாலே சிறு சிறு கலாட்டாக்கள் இருக்கத்தான் செய்யும். அந்த கலாட்டா சில நேரங்களில் திருமணம் நின்று போகும் அளவுக்கு கூட இருக்கும். உத்தரப்பிரதேசத்தில் சாப்பாட்டில் ரொட்டி தாமதமாக கொண்டு வந்து கொடுத்தார்கள் என்பதற்காக மணமகன் திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் என்ற கிராமத்தில் மெஹ்தாப் என்பவருக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடந்த 22-ம் தேதியே திருமண சடங்குகள் தொடங்கி நடந்து வந்தது. மணமகன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவர்களுக்கு பெண் வீட்டார் இனிப்பு வழங்கி வரவேற்றனர். பின்னர் மணமகன் வீட்டாருக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது. ஆனால் சாப்பாட்டில் ரொட்டி சிறிது தாமதமாக பரிமாறப்பட்டதாக தெரிகிறது.
இதனால் மணமகன் வீட்டார் கடும் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்கள் இது தொடர்பாக மணமகள் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்வீட்டார் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். மறு நாள் காலையில்தான் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த பிரச்னையில் இரவோடு இரவாக மணமகன் வீட்டார் பெண் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். அத்துடன், சென்ற வேகத்தில் உறவுக்கார பெண் ஒருவரை பார்த்து உடனே அந்த மணமகனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இந்த செய்தியை கேள்விப்பட்டு மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். திருமணத்திற்காக 7 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவு செய்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதில் 1.5 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.