ராட்சஸ அலைகளுக்கு ஒருவர் பலி! துறைமுகங்கள் மூடல்!
தென் அமெரிக்க நாடான ஈக்குவேடாரில் எழுந்த ராட்சஸ அலைகளுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், அதன் அண்டை நாடான பெருவிலுள்ள பெரும்பாலான துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள வட அமெரிக்க கண்டத்தின் கடல்பகுதியில் உருவானதாக கருதப்படும் இந்த ராட்சஸ அலைகள் தென் அமெரிக்க நாடுகளின் கடல்பகுதிகளை தாக்கியுள்ளது.
இந்நிலையில், ஈக்குவேடார் நாட்டின் மண்டா கடல்பகுதியில் காணாமல்போனதாக கருதப்படும் ஒரு நபரது உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் அந்த ராட்சஸ அலைகளில் சிக்கி பலியாகியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அண்டை நாடான பெரு நாட்டு கடல்பகுதியில் சுமார் 13 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சஸ அலைகளினால் அந்நாட்டின் மத்திய மற்றும் வடக்கு கடல் கரைப்பகுதிகள் பொதுமக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு!
மேலும், அந்நாட்டிலுள்ள 121 துறைமுகங்களில் 91 துறைமுகங்கள் வருகின்ற 2025 ஜனவரி 1 ஆம் தேதி வரை மூடப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகளும் மீனவர்களும் கடலுக்குள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான புகைப்படங்களில் அந்நாட்டின் கடல்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை கவிழ்த்தும், கரைகளிலுள்ள பொதுமக்களுக்கான சதுக்கங்களை ராட்சஸ அலைகள் மூழ்கடிப்பது போன்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ராட்சஸ அலைகளினால் மீனவப் படகுகள் சேதாரமானதுடன், நூற்றுக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.