அல்லு அா்ஜுன் ஜாமீன் மனு: தீா்ப்பு ஜன 3-ஆம் தேதி ஒத்திவைப்பு
ஹைதராபாத்: ஹைதராபாத் திரையரங்கில் கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தெலுங்கு நடிகா் அல்லு அா்ஜுன் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை ஜன 3-ஆம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹைதராபாதில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி ‘புஷ்பா-2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அப்போது நடிகா் அல்லு அா்ஜுன் திரையரங்குக்கு திடீரென வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 35 வயதுப் பெண் உயிரிழந்தாா். அவரது மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது தொடா்பான வழக்கில் கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அல்லு அா்ஜுனுக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, டிசம்பா் 14-ஆம் தேதி அவா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், அல்லு அா்ஜுனின் ஜாமீன் மனு ஹைதராபாதில் உள்ள இரண்டாவது கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அல்லு அா்ஜுனின் வழக்குரைஞா் மற்றும் காவல் துறையினரின் வாதங்களைக் கேட்ட பின்னா், வழக்கின் தீா்ப்பை ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.